பஞ்சாபில் விஷ சாராயத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 86 ஆனது

பஞ்சாபில் விஷ சாராயத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 86 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Update: 2020-08-02 01:13 GMT
சண்டிகர்,

பஞ்சாபின் அமிர்தசரஸ், தார்ன் தரன் மற்றும் குர்தாஸ்பூர் படாலா மாவட்டங்களில் சட்ட விரோதமாக சாராயம் காய்ச்சி விற்பனை செய்வது அதிகரித்து உள்ளது. இந்த மாவட்டங்களில் கடந்த புதன்கிழமை ஏராளமானோர் இந்த சாராயத்தை குடித்து உள்ளனர்.

இதில் விஷத்தன்மை கலந்திருந்ததால் அந்த சாராயம் குடித்தவர்களுக்கு அடுத்தடுத்து உடல் உபாதைகள் ஏற்பட்டன. இதில் 3 மாவட்டங்களிலும் அடுத்தடுத்து மரணங்கள் நிகழ்ந்தன. அந்தவகையில் புதன்கிழமை முதல் நேற்று முன்தினம் வரை 38 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த மாவட்டங்களில் நேற்றும் 48 பேர் பலியாகினர். இதன் மூலம் விஷ சாராய பலி எண்ணிக்கை 86 ஆனது. இதில் தார்ன் தரன் மாவட்டத்தில் மட்டும் 63 பேர் உயிரிழந்தனர்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து இந்த மாவட்டங்களில் போலீசார் அதிரடி சோதனைகளை மேற்கொண்டனர். இதில் 25 பேர் கைது செய்யப்பட்டனர். இதற்கிடையே இந்த சம்பவத்தில் கவனக்குறைவாக இருந்ததாக கலால்துறை அதிகாரிகள் 7 பேர் மற்றும் போலீசார் 6 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

மேலும் செய்திகள்