கேரளாவில் வெளுத்து வாங்கும் மழையால் நில சரிவு; வெள்ள நீரில் மூழ்கியது சிவன் கோவில்

கேரளாவில் தொடர் கனமழையால் ஏற்பட்ட வெள்ள நீரில் ஆலுவா நகரிலுள்ள சிவன் கோவில் மூழ்கியது.;

Update:2020-08-07 10:17 IST
திருவனந்தபுரம்,

கேரளாவில் பருவகால மழைப்பொழிவை முன்னிட்டு பல பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது.  இதனால், நகரங்களில் வெள்ளநீர் பெருக்கெடுத்து சாலைகளில் ஓடி வழிகிறது.  கேரளாவில் காங்கிரஸ் எம்.பி.யாக ராகுல் காந்தி தேர்வு செய்யப்பட்ட வயநாடு தொகுதிக்குட்பட்ட வயநாடு மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக கனமழை பெய்துள்ளது.

இதில், வீடுகள், கட்டிடங்கள் மற்றும் குடிசை பகுதிகள் ஆகியவை நீரால் சூழப்பட்டு உள்ளன.  சாலையெங்கும் நீர் நிரம்பி குளம்போல் காட்சி தருகிறது.  மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது.  ஒருபுறம் கொரோனா பாதிப்புகள் கேரளாவை ஆட்டி படைத்து வரும் சூழலில் மறுபுறம் மழையால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் ராஜமலா பகுதியில் திடீரென இன்று நிலச்சரிவு ஏற்பட்டு உள்ளது.  இதுபற்றிய தகவல் கிடைக்க பெற்று போலீசார் மற்றும் தீயணைப்பு துறை அதிகாரிகள் சம்பவ பகுதிக்கு உடனடியாக சென்றுள்ளனர்.

தொடர் மழையால் பெரியார் ஆற்றில் நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.  இதனால் ஆலுவா நகரில் உள்ள சிவன் கோவில் வெள்ள நீரில் மூழ்கியுள்ளது.  அதனை சுற்றியுள்ள பாலமும் நீருக்குள் மூழ்கியுள்ளது.

மேலும் செய்திகள்