காதல் வலையில் வீழ்த்தி கல்லூரி மாணவி பலாத்காரம்: போலீஸ் விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்
கல்லூரி மாணவியை கூட்டு பலாத்காரம் செய்த காதலன் உள்பட 3 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.;
ராமநகர்,
கர்நாடக மாநில பெங்களூரு தெற்கு (ராமநகர்) மாவட்டம் மாகடி டவுனை சேர்ந்தவர் 19 வயது இளம்பெண். இவர் பெங்களூருவில் உள்ள கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் இவருக்கும் மாகடியை சேர்ந்த விகாஸ் என்ற வாலிபருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் விகாஸ், இளம்பெண்ணை காதலிப்பதாக கூறியுள்ளார். முதலில் தயங்கிய மாணவி, விகாசின் ஆசை வார்த்தைகளை நம்பி காதலில் விழுந்துள்ளார்.
இதையடுத்து இருவரும் செல்போன் எண்களை பரிமாறி பேசி வந்துள்ளனர். இந்த நிலையில் மாணவியின் வீட்டில் யாரும் இல்லாத போது, விகாஸ் அங்கு சென்றுள்ளார்.
அப்போது முதலில் விகாஸ் மாணவியிடம் ஆசை வார்த்தைகள் கூறி கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அதனை அவர் செல்போனில் வீடியோவாக எடுத்து வைத்துள்ளார்.
இந்த நிலையில் அந்த வீடியோவை காட்டி மிரட்டிய விகாஸ், தனது நண்பர்களான பிரசாந்த், சேத்தன் ஆகியோருடன் உல்லாசமாக இருக்கும்படி கூறியுள்ளார். இதற்கு மாணவி சம்மதிக்கவில்லை. இதையடுத்து ஆபாச வீடியோவை வெளியிடுவதாக மிரட்டியுள்ளார். அத்துடன் சேத்தனின் வீட்டுக்கு கட்டாயப்படுத்தி மாணவியை விகாஸ் அழைத்து சென்று பிரசாந்த், சேத்தன் ஆகியோருடன் சேர்ந்து மாணவியை மாறி, மாறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
இந்த கூட்டு பாலியல் பலாத்கார சம்பவம் கடந்த அக்டோபர் மாதம் நடந்துள்ளது. ஆனால் இந்த வன்கொடுமை சம்பவத்தால் பாதிக்கப்பட்ட மாணவி தனக்கு நேர்ந்த கொடுமை பற்றி வெளியுலகத்திற்கு தெரிந்தால் என்னவாகும் என்ற அச்சத்தில் இருந்துள்ளார். இதனால் அவர் உடனடியாக போலீசில் புகார் அளிக்காமல் இருந்துள்ளார்.
பின்னர் தனக்கு நேர்ந்த கொடூரம் பற்றி மாணவி பெற்றோரிடம் கூறி கதறி அழுதாள். அதையடுத்து மாணவி சம்பவம் பற்றி மாகடி டவுன் போலீசில் புகாா் அளித்தார். அதன்பேரில் போலீசார் காதல் வலையில் வீழ்த்தி மாணவியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த காதலன் விகாஸ், பிரசாந்த், சேத்தன் ஆகிய 3 பேரையும் அதிரடியாக கைது செய்தனர். அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
விசாரணையின் வெளியான தகவல்
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், சேத்தன் எலெக்ட்ரீசியனாக பணியாற்றி வந்ததும், அவருக்கு திருமணமாகி மனைவி இருப்பதும், அவர் கர்ப்பமாக இருப்பதால், தற்போது தாய் வீட்டுக்கு பிரசவத்துக்கு சென்று இருப்பதும், இந்த நிலையில் தான் விகாஸ், பிரசாந்துடன் சேர்ந்து தனது வீட்டில் வைத்து நண்பரின் காதலியை சேத்தன் கூட்டு பலாத்காரம் செய்ததும் தெரியவந்துள்ளது.