4 நாட்களுக்கு பிறகு இந்தியாவில் தொற்று பாதிப்பு குறைந்தது: பலி எண்ணிக்கையும் வீழ்ச்சி
4 நாட்களுக்கு பிறகு இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு குறைந்துள்ளது. பலி எண்ணிக்கையும் வீழ்ச்சி அடைந்துள்ளது.;
புதுடெல்லி,
இந்தியாவில் கடந்த 4 நாட்களாக தினமும் 60 ஆயிரத்துக்கு மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு பதிவாகி வந்தது.
இந்த நிலையில், 4 நாட்களுக்கு பிறகு நேற்று கொரோனா பாதிப்பு 60 ஆயிரத்துக்கு கீழே வந்தது. காலை 8 மணியுடன் முடிந்த ஒரு நாளில், நாட்டில் 53 ஆயிரத்து 601 பேருக்கு மட்டுமே புதிதாக தொற்று உறுதியாகி உள்ளது.
இதன்மூலம் இந்தியாவில் தொற்று பாதித்தோரின் மொத்த எண்ணிக்கை 22 லட்சத்து 68 ஆயிரத்து 675 ஆக அதிகரித்துள்ளது.
நேற்று முன்தினம் ஒரே நாளில் இந்தியாவில் கொரோனாவுக்கு 1,007 பேர் பலியானது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ஆனால் நேற்று பலி எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டது. 871 பேர் பலியாகி உள்ளனர்.
மராட்டிய மாநிலத்தில் மட்டும் அதிகபட்சமாக 293 பேர் பலியாகி இருக்கிறார்கள். அதற்கு அடுத்த நிலையில் தமிழகத்திலும், கர்நாடகத்திலும் 100-க்கும் மேற்பட்டோர் கொரோனாவுக்கு இரையாகி அதிர்வுகளை ஏற்படுத்தி உள்ளனர்.
ஆந்திராவில் 80, உத்தரபிரதேசத்தில் 51, மேற்கு வங்காளத்தில் 41, டெல்லி மற்றும் குஜராத்தில் தலா 20, மத்தியபிரதேசத்தில் 19, பஞ்சாப்பில் 18, ஒடிசாவில் 14, ஜார்கண்ட், ராஜஸ்தானில் தலா 11, பீகாரில் 10 பேர் பலியாகி உள்ளனர்.
உத்தரகாண்டில் 9 பேரும், தெலுங்கானாவில் 8 பேரும், கேரளாவில் 7 பேரும், அசாம், அரியானா, ஜம்மு காஷ்மீர் ஆகியவற்றில் தலா 6 பேரும், கோவாவில் 5 பேரும், சத்தீஷ்காரில் 3 பேரும், இமாசலபிரதேசம், புதுச்சேரியில் தலா 2 பேரும், திரிபுராவில் ஒருவரும் கொரோனாவால் இறந்துள்ளனர்.
இந்தியாவில் இதுவரை மொத்தம் 45 ஆயிரத்து 257 பேர் கொரோனாவுக்கு இரையாகி இருக்கிறார்கள். தொடர்ந்து முதல் இடத்தில் உள்ள மராட்டியத்தில் 18 ஆயிரத்து 50 பேரும், தமிழகத்தில் 5,041 பேரும், டெல்லியில் 4,131 பேரும், கர்நாடகத்தில் 3,312 பேரும், குஜராத்தில் 2,672 பேரும், உத்தரபிரதேசத்தில் 2,120 பேரும், ஆந்திராவில் 2,116 பேரும், மேற்கு வங்காளத்தில் 2,100 பேரும், மத்திய பிரதேசத்தில் 1,015 பேரும் உயிரிழந்திருக்கிறார்கள்.
ராஜஸ்தானில் 800, தெலுங்கானாவில் 645, பஞ்சாப்பில் 604, அரியானாவில் 489, ஜம்மு காஷ்மீரில் 478, பீகாரில் 397, ஒடிசாவில் 286, ஜார்கண்டில் 188, அசாமில் 151, உத்தரகாண்டில் 134, கேரளாவில் 115, சத்தீஷ்காரில் 99, புதுச்சேரியில் 89, கோவாவில் 80, திரிபுராவில் 43, சண்டிகாரில் 25, அந்தமான் நிகோபாரில் 20, இமாசலபிரதேசத்தில் 17, மணிப்பூரில் 11, லடாக்கில் 9, நாகலாந்தில் 8, மேகாலயாவில் 6, அருணாசலபிரதேசத்தில் 3, தத்ராநகர் ஹவேலி, டாமன், தியுவில் 2, சிக்கிமில் ஒருவர் பலியாகி உள்ளனர்.
இவர்களில் 70 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் நாள்பட்ட நோய்களுடன், கொரோனாவும் வந்து தாக்கியதால் உயிரிழந்திருக்கிறார்கள் என மத்திய சுகாதார அமைச்சகம் கூறுகிறது.
இந்தியாவில் பல்வேறு ஆஸ்பத்திரிகளில், கொரோனா பாதிப்பில் இருந்து சிகிச்சைக்கு பின்னர் குணம் அடைந்து வீடு திரும்பியோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று வரை 15 லட்சத்து 83 ஆயிரத்து 489 பேர் கொரோனாவில் இருந்து குணம் அடைந்து வீடு திரும்பி இருக்கிறார்கள்.
இதனால் மீட்பு சதவீதம் என்பது 69.80 சதவீதமாக அதிகரித்துள்ளது.
அதே நேரத்தில் பலி விகிதம் 1.99 சதவீதமாக குறைந்துள்ளது.
தற்போது நாட்டில் பல்வேறு ஆஸ்பத்திரிகளில் கொரோனாவுக்கு தொடர்ந்து சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 6 லட்சத்து 39 ஆயிரத்து 929 ஆக உள்ளது. மொத்தம் பாதிப்புக்கு ஆளானோரில் இது 28.21 சதவீதம் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே நேற்று முன்தினம் வரையில் நாட்டில் 2 கோடியே 45 லட்சத்து 83 ஆயிரத்து 558 மாதிரிகள் சோதிக்கப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.