ரூ.4,000 கோடி ஊழல்: ஆப்கோ முன்னாள் தலைவர் வீட்டில் ரெய்டு; தங்கம், வெள்ளி, ரூ.1 கோடி பறிமுதல்
ஆந்திர பிரதேசத்தில் கைத்தறி கூட்டுறவு சங்கத்தின் முன்னாள் தலைவர் வீட்டில் நடந்த சி.ஐ.டி. ரெய்டில் தங்கம், வெள்ளி, ரூ.1 கோடி உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.;
அமராவதி,
ஆந்திர பிரதேசத்தில் முதல் மந்திரி ஜெகன் மோகன் ரெட்டி தலைமையில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. இதற்கு முன்பு சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேச கட்சியின் ஆட்சியில் நடந்த ஊழல் பற்றி அரசுக்கு வரும் புகார்கள் மீது விசாரணை நடந்து வருகிறது.
ஆந்திராவில் கைத்தறி கூட்டுறவு சங்கத்தில் (ஆப்கோ) முன்னாள் தலைவராக இருந்தவர் குஜ்ஜல சீனிவாசுலு. இவர் பதவியில் இருந்தபொழுது, ஆந்திர கைத்தறி கூட்டுறவு சங்கத்தில் ரூ.4 ஆயிரம் கோடி அளவுக்கு பெரிய ஊழல் நடந்துள்ளது என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதுபற்றி முதன்மை நெசவாளர் கூட்டுறவு சங்க கூட்டமைப்பின் தலைவர்கள் அரசுக்கு புகார் அளித்தனர்.
இதனை தொடர்ந்து சி.ஐ.டி. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த ஊழல் பற்றி விசாரணை மேற்கொள்ள காஜிபேட்டை பகுதியில் வசித்து வரும் சீனிவாசுலுவின் வீட்டில் சி.ஐ.டி. அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர்.
இதில், அவரது வீட்டில் இருந்து பல பொருட்களை அதிகாரிகள் இன்று பறிமுதல் செய்து உள்ளனர். அவற்றில், 3 கிலோ தங்கம், 2 கிலோ வெள்ளி, ரூ.1 கோடி பணம் மற்றும் சொத்து ஆவணங்கள் ஆகியவை அடங்கும்.