இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 69,878 பேருக்கு கொரோனா பாதிப்பு; 945 பேர் உயிரிழப்பு
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 69,878 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.;
புதுடெல்லி,
நாட்டில் கொரோனா பாதிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகின்றன. உலக அளவில் அமெரிக்கா, பிரேசில் ஆகிய நாடுகளை தொடர்ந்து பாதிப்பு எண்ணிக்கையில் இந்தியா 3வது இடத்தில் உள்ளது. நேற்று ஒரே நாளில் 68 ஆயிரத்து 898 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 29 லட்சத்து 5 ஆயிரத்து 823 ஆக இருந்தது. நேற்று முன்தினத்துடன் ஒப்பிடுகையில் (69 ஆயிரத்து 652) நேற்று பாதிப்பு சற்றே குறைந்திருந்தது.
கொரோனாவுக்கு இந்தியாவில் நேற்று 983 பேர் பலியாகி இருக்கிறார்கள். இதனால், நாட்டில் இதுவரை 54 ஆயிரத்து 849 பேர் கொரோனாவால் உயிரிழந்து இருந்தனர். இதில் மராட்டியம் அதிக அளவில் பாதிப்படைந்து உள்ளது. இதனை தொடர்ந்து தமிழகம் மற்றும் கர்நாடகம் ஆகியவை உள்ளன.
இந்நிலையில், மத்திய சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகம் இன்று வெளியிட்ட செய்தியில், இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 69,878 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் மொத்த எண்ணிக்கை 29 லட்சத்து 75 ஆயிரத்து 702 ஆக உயர்வடைந்து உள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் 945 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை 55,794 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 22 லட்சத்து 22 ஆயிரத்து 578 பேர் குணமடைந்து சென்றுள்ளனர். 6 லட்சத்து 97 ஆயிரத்து 330 பேர் சிகிச்சையில் உள்ளனர் என தெரிவித்து உள்ளது.