இந்தியாவில் 16 நாட்களில் 10 லட்சம் தொட்ட கொரோனா பாதிப்புகள்; அதிர்ச்சி தகவல்

இந்தியாவில் 16 நாட்களில் 10 லட்சம் கொரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ள அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது.

Update: 2020-08-23 05:18 GMT
புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் அதிரடியாக உயர்ந்து வருகிறது.  கடந்த 24 மணி நேரத்தில் 69,239 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  இதனால், கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 30 லட்சத்து 44 ஆயிரத்து 941 ஆக உயர்ந்துள்ளது.  912 பேர் பலியாகி உள்ளனர். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 56,706 ஆக உயர்வடைந்து உள்ளது.

இந்தியாவில் மராட்டியம் அதிக பாதிப்புகளுடன் முதல் இடத்தில் உள்ளது.  மும்பை, புனே மற்றும் நாக்பூர் ஆகிய நகரங்கள் அதிக இலக்காகி உள்ளன.  இதன்படி, மராட்டியம் (6,71,942) முதல் இடத்திலும், தமிழகம் (3,73,410) 2வது இடத்திலும், ஆந்திர பிரதேசம் (3,45,216) 3வது இடத்திலும், கர்நாடகம் (2,64,546) 4வது இடத்திலும், உத்தர பிரதேசம் (1,82,614) 5வது இடத்திலும் உள்ளன.

இதேபோன்று இந்தியாவில் கொரோனா தொற்றின் வேகம் அதிகரித்து வருகிறது.  கடந்த 16 நாட்களில் 10 லட்சம் கொரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளன என்ற அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது.  நாட்டில் முதல் 10 லட்சம் பாதிப்புகள் ஏற்படுவதற்கு 138 நாட்கள் எடுத்து கொண்டன.  ஆனால் அடுத்த 21 நாட்களில் கூடுதலாக 10 லட்சம் கொரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டன.

நாட்டில் கொரோனா பரிசோதனைகளும் அதிக அளவில் நடத்தப்படுகின்றன.  நேற்று 8,01,147 கொரோனா பரிசோதனைகள் நடந்தன.  இதனால் நேற்று வரையில் 3 கோடியே 52 லட்சத்து 92 ஆயிரத்து 220 பரிசோதனைகள் நடத்தப்பட்டு உள்ளன.

சமீப நாட்களாக தொடர்ந்து 60 ஆயிரத்திற்கும் மேல் கொரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்படும் நிலையில், கடந்த 16 நாட்களில் 10 லட்சம் கொரோனா பாதிப்புகள் ஏற்பட்டு 30 லட்சம் என்ற எண்ணிக்கையை கடந்துள்ளது பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்