முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் உடலுக்கு இன்று இறுதிச்சடங்கு

முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி நேற்று மாலை 4.30 மணியளவில் காலமானார்.

Update: 2020-09-01 03:19 GMT
புதுடெல்லி,

இந்தியாவின் 13-வது ஜனாதிபதியாக கடந்த 2012-ம் ஆண்டு முதல் 2017 வரை பதவி வகித்தவர் பிரணாப் முகர்ஜி (வயது 84). மேற்கு வங்காளத்தை சேர்ந்த இவர், பதவி ஓய்வுக்குப்பின் டெல்லியில் வசித்து வந்தார். இவர் கடந்த மாதம் 9-ந் தேதி தனது வீட்டில் தவறி விழுந்தார். 

இதில் அவரது மூளையில் ரத்தம் உறைந்தது. எனவே மறுநாள் டெல்லி ஆர்.ஆர். ராணுவ மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.  அங்கு அவருக்கு அவசர அவசரமாக உயிர் காக்கும் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. சுமார் 7 மணி நேரம் நடந்த அறுவை சிகிச்சையின் மூலம், பிரணாப்பின் மூளையில் இருந்த மிகப்பெரிய ரத்தக்கட்டி வெற்றிகரமாக அகற்றப்பட்டது.

முன்னதாக ஆஸ்பத்திரியில் பிரணாப் முகர்ஜிக்கு கொரோனா பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது. இதில் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருந்தது உறுதி செய்யப்பட்டது. மூளையில் நடந்த அறுவை சிகிச்சைக்குப்பின் பிரணாப் முகர்ஜியின் உடல்நிலை மோசமடைந்தது. 22 நாட்களாக தீவிர சிகிச்சையில் இருந்த பிரணாப் முகர்ஜி நேற்று மாலை 4.30 மணியளவில் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார். 

மாரடைப்பால் அவரது உயிர் பிரிந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர். முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி மறைவுக்கு நாடு முழுவதும் 7 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படுகிறது.  பிரணாப் முகர்ஜி மறைவுக்கு ஜனாதிபதி, துணைஜனாதிபதி, பிரதமர், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்பட பல்வேறு தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர். 

இந்த நிலையில், பிரணாப் முகர்ஜியின் உடலுக்கு இன்று இறுதிச்சடங்குகள் நடைறும் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். 
பிரணாப் முகர்ஜியின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் காலை 9.15 முதல் 10.15 வரை முக்கியப் பிரமுகர்கள் அஞ்சலி செலுத்த அனுமதிக்கப்படுவார்கள் என பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.  

ராஜாஜி மார்க்கில் பிரணாப் முகர்ஜியின் உடல், பொதுமக்கள் மரியாதை செலுத்த ஒரு மணி நேரம் வைக்கப்படும், கொரோனா தொற்று காரணமாக அவரது உடல், ராணுவ வாகனத்திற்கு பதிலாக வேனில் எடுத்துச் செல்லப்படும் என்றும், சுகாதார தடுப்பு நடவடிக்கைகள் அனைத்தும் முழுமையாகப் பின்பற்றப்படும்” என்று பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்