மத்திய அரசு ஜி.எஸ்.டி. நிலுவை தொகையை வழங்காதது பாவம் - முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே

மத்திய அரசு ஜி.எஸ்.டி. நிலுவை தொகையை வழங்காதது பாவம் என முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே கடுமையாக தாக்கி உள்ளார்.

Update: 2020-09-10 04:50 GMT
மும்பை, 

மராட்டிய அரசு மேற்கொண்ட பல்வேறு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே நேற்று முன்தினம் நடந்த மேல்-சபை கூட்டத்தில் பட்டியலிட்டார்.

அப்போது ஜி.எஸ்.டி. நிலுவை தொகையை மராட்டியத்துக்கு கொடுக்காத மத்திய அரசையும் கடுமையாக தாக்கி பேசினார். அவர் பேசியதாவது:-

மராட்டியத்தில் வெறும் 3 ஆக இருந்த கொரோனா பரிசோதனை மையத்தின் எண்ணிக்கை 525 ஆக உயர்த்தப்பட்டன. மேலும் கொரோனா நோயாளிகளுக்கான படுக்கைகள் 7 ஆயிரத்து 722-ல் இருந்து 3 லட்சத்து 50 ஆயிரமாக உயர்த்தப்பட்டது.

மேலும் சீனாவில் 15 நாட்களில் உருவாக்கப்பட்ட அவசர கால மருத்துவமனை போல, நாங்களும் 15-20 நாட்களுக்குள் சிறப்பு மருத்துவமனை அமைத்தோம். மத்திய அரசு சார்பில் ஆகஸ்ட் 15-ந் தேதி தடுப்பூசி வெளியிடப்படுவதாக இருந்தது. ஆனால் தேதி கடந்துவிட்டது. புதிய தேதி எதுவும் இதுவரை அறிவிக்கப்படவில்லை.

இதேபோல இதுவரை மத்திய அரசு மராட்டியத்திற்கு தரவேண்டிய சுமார் ரூ.22 ஆயிரம் கோடி ஜி.எஸ்.டி. நிலுவை தொகையை வழங்கவில்லை. உரிய தொகையை வழங்குவதற்கு பதிலாக நம்மை கடன் பெற்றுக்கொள்ளுமாறு மத்திய அரசு வலியுறுத்துகிறது. இது ஒரு பாவச்செயலாகும்.

எனவே மராட்டிய எதிர்க்கட்சிகள் நமக்கு வரவேண்டிய ஜி.எஸ்.டி. தொகையை ஒதுக்குமாறு மத்திய அரசிடம் ஒருமித்த குரலில் வலியுறுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்