உத்தவ் தாக்கரேயின் கேலி சித்திரத்தை பரப்பிய கடற்படை அதிகாரி மீது தாக்குதல்; சிவசேனாவினர் 6 பேர் கைது

முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேவின் கேலி சித்திரத்தை வாட்ஸ்அப்பில் பகிர்ந்த ஓய்வு பெற்ற கடற்படை அதிகாரியை தாக்கிய சிவசேனாவினர் 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2020-09-12 23:15 GMT
மும்பை,

மும்பை காந்திவிலி லோக்கன்ட்வாலா காம்பளக்ஸ் பகுதியை சேர்ந்தவர் மதன் சர்மா (வயது62). ஓய்வு பெற்ற கடற்படை அதிகாரி. இவர் சமீபத்தில் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேவின் கேலி சித்திரத்தை வாட்ஸ் அப் குழுவில் பகிர்ந்து உள்ளார்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் காலை 11.30 மணியளவில் ஓய்வு பெற்ற கடற்படை அதிகாரியின் வீட்டுக்கு ஒரு கும்பல் சென்றது. அவர்கள் முதல்-மந்திரியின் கேலி சித்திரத்தை வாட்ஸ்அப்பில் பகிர்ந்தற்காக அவரை சரமாரியாக தாக்கி உள்ளனர். கும்பல் அவரை துரத்தி சென்று தாக்கும் காட்சி அங்குகட்டிடத்தில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது.

இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், “ ஓய்வு பெற்ற கடற்படை அதிகாரி மதன் சர்மா, உத்தவ் தாக்கரேவின் கேலி சித்திரத்தை வாட்ஸ்அப் குழுவில் பகிர்ந்து உள்ளார். இதையடுத்து சில சிவசேனாவினர் அவரது வீட்டுக்கு சென்று அவரை அடித்து உள்ளனர். இதில் அவரது கண்ணில் காயம் ஏற்பட்டுள்ளது. அதற்காக அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து கம்லேஷ் என்பவர் உள்பட 6 பேரை கைது செய்து உள்ளோம் ” என்றார்.

இந்த நிலையில் தாக்குதலுக்கு உள்ளான கடற்படை முன்னாள் அதிகாரி மதன் சர்மாவை ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் தொடர்பு கொண்டு ஆறுதல் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் தளத்தில் கூறுகையில், ‘மும்பையில் தாக்குதலுக்கு உள்ளான ஓய்வு பெற்ற கடற்படை அதிகாரி மதன் சர்மாவிடம் பேசி அவரது உடல்நலம் குறித்து விசாரித்தேன். ஓய்வுபெற்ற ராணுவ வீரர்கள் மீது நடத்தப்படும் இதுபோன்ற தாக்குதல்கள் முற்றிலும் வருந்தத்தக்கதும், ஏற்க முடியாததும் ஆகும். அவர் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன்’ என்று குறிப்பிட்டு இருந்தார்.

மேலும் செய்திகள்