கொரோனா வைரசின் பிறப்பிடம் சீன ஆய்வகம்; சீன பெண் மருத்துவர் திடுக்கிடும் தகவல்

கொரோனா வைரசானது சீன ஆய்வகத்தில் உருவானது என்ற திடுக்கிடும் தகவலை அமெரிக்காவுக்கு தப்பிய பெண் மருத்துவர் கூறியுள்ளார்.

Update: 2020-09-15 00:28 GMT
புதுடெல்லி,

உலக நாடுகளை மிரள வைத்து கொண்டிருக்கும் கொரோனா வைரசின் தோற்றம் பற்றி சரிவர அறியப்படாமலேயே உள்ளது.  சீனாவின் உகான் நகரில் முதன்முறையாக கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது.  அதன்பின்னர் மற்ற நாடுகளுக்கும் பரவ தொடங்கியது.

இதனை கட்டுப்படுத்த பல்வேறு நாடுகளும் தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளன.  தடுப்பு மருந்து பரிசோதனைகளும் நடந்து வருகின்றன.  இந்த நிலையில், சீனாவை சேர்ந்த பெண் மருத்துவர் ஒருவர் அதிர்ச்சி தகவலை வெளியிட்டு உள்ளார்.

சீனாவின் உகான் நகரில் அரசால் நிர்வகிக்கப்படும் ஆய்வகம் ஒன்றில் கொரோனா வைரசானது உருவாக்கப்பட்டது.  வைரசின் பிறப்பிடத்திற்கான மையம் அதுவே.  இதற்கான அறிவியல் சான்றுகள் உள்ளன என மருத்துவர் லி மெங் யான் கூறியுள்ளார்.

சீனாவில், புதிய நிமோனியா பற்றி கடந்த ஆண்டு டிசம்பர் மற்றும் ஜனவரி தொடக்கத்திற்கு இடையே முதல் ஆய்வும், ஜனவரி மத்தியில் மற்றொரு ஆய்வும் என 2 ஆய்வுகளை இவர் மேற்கொண்டார்.

அதன்பின், ஹாங்காங்கில் இருந்து அமெரிக்காவுக்கு தப்பி ஓடியுள்ளார்.  இதுபற்றி அவர் கூறும்பொழுது, எனது ஆய்வு பற்றி உலக சுகாதார அமைப்பு ஆலோசகர் மற்றும் என்னுடைய சூப்பர்வைசராக இருந்தவரிடம் கூற முடிவு செய்தேன்.  ஆனால் உலக சுகாதார அமைப்பு மற்றும் அவரிடம் இருந்து எந்த பதிலும் இல்லை.

அமைதியாக இருக்கும்படியும், இல்லை எனில் காணாமல் போக செய்யப்படுவாய் என்றும் ஒவ்வொருவரும் என்னை எச்சரித்தனர் என்று கூறியுள்ளார்.

இதன்பின்னரே அமெரிக்காவில் உள்ள பிரபல சீன யூடியூப் நபரை தொடர்பு கொண்டு அவரிடம் அந்த பெண் மருத்துவர் விளக்கியுள்ளார்.  சீன மொழியில் பேசிய பதிவில், சீன கம்யூனிஸ்டு கட்சியானது கொரோனா நெருக்கடியை மறைத்தது.  இது மனிதரிடம் இருந்து மனிதருக்கு பரவியது என்ற உண்மையை வெளியிட்டார்.

இந்த மரபணு மாற்றப்பட்ட வைரசானது பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று கூறிய அவர், உகான் நகரில் கடல் உணவு சந்தையில் இருந்து வைரசானது பரவியது என்பதெல்லாம் உண்மையான நோக்கங்களை மறைப்பதற்காக கூறப்பட்டவை என்றும் அவர் கூறியுள்ளார்.

வைரசானது இயற்கையில் இருந்து வரவில்லை.  உகான் நகரில் சீன அரசால் நிர்வகிக்கப்படும் ஆய்வகம் ஒன்றில் இருந்து வந்துள்ளது என்ற திடுக்கிடும் தகவலை வெளியிட்டு உள்ளார்.

இதன்படி, சி.சி.45 மற்றும் இசட்.எக்ஸ்.சி.41 என்ற சில கெட்டவகை கொரோனா வைரஸ்களை கண்டறிந்து அவற்றை சீன ராணுவ அமைப்பு உருவாக்கி உள்ளது.  இதனடிப்படையில், ஆய்வகத்தில் தயார் செய்யப்பட்டு புதிய வைரசானது வெளிவந்துள்ளது.

இதற்கான அறிவியல் சான்றுகளை உலகம் முழுவதுமுள்ள சிறந்த விஞ்ஞானிகள் கொண்ட சிறிய குழு உதவியுடன் அறிவியல் அறிக்கை தயார் செய்யும் பணியில் அவர் ஈடுபட்டு உள்ளார்.

ஒரு சில நாட்களில் இதன் முதல் அறிக்கை வெளியிடப்படும் என அவர் கூறியுள்ளார்.  அதில், அனைத்து நிரூபணங்களும் மக்களுக்கு தெரிவிக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.  இந்த வைரசானது அதிக தொற்றும் தன்மை மற்றும் ஆபத்து நிறைந்தது என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்