சசிகலா விடுதலை ஆவது எப்போது? கர்நாடக சிறைத்துறை பதில்

பெங்களூரு சிறையில் இருந்து சசிகலா விடுதலை ஆவது எப்போது? என்பது குறித்து கர்நாடக சிறைத்துறை பதில் அளித்துள்ளது.

Update: 2020-09-16 00:11 GMT
பெங்களூரு,

சொத்து குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், கடந்த 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 15-ந்தேதியில் இருந்து அவர், பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து வருகிறார். அவரது தண்டனை காலம் இன்னும் ஒரு சில மாதங்களில் முடிவடைய உள்ள நிலையில் சசிகலா விடுதலை ஆவது எப்போது? என அவரது ஆதரவாளர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.

அவரது விடுதலையால் அ.தி.மு.க.வில் மாற்றங்கள் ஏற்படலாம் என்ற கணிப்பும் இருந்து வருகிறது. இதன் காரணமாகவே அவரது விடுதலை குறித்து அடிக்கடி பேசப்பட்டு வருகிறது. சசிகலா விடுதலை தொடர்பாக அ.தி.மு.க. அமைச்சர்கள் பல்வேறு கருத்துகளை அவ்வப்போது தெரிவித்து வருகின்றனர்.

இந்தநிலையில் பெங்களூருவை சேர்ந்த தகவல் பெறும் உரிமை சட்ட ஆர்வலர் டி.நரசிம்மமூர்த்தி என்பவர், சசிகலா விடுதலை குறித்து கேள்வி எழுப்பி தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் விண்ணப்பித்திருந்தார். அவரது கேள்விக்கு பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறை சூப்பிரண்டு ஆர்.லதா கடிதம் மூலம் பதில் அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

சிறை ஆவணங்கள்படி சுப்ரீம் கோர்ட்டு விதித்துள்ள அபராதத்தொகையை செலுத்தினால், தண்டனை கைதி எண் 9,234 கொண்ட சசிகலா அனேகமாக அடுத்த ஆண்டு (2021) ஜனவரி மாதம் 27-ந் தேதி விடுதலை ஆகலாம். அபராதத்தொகையை செலுத்த தவறினால், அவர் மேலும் 13 மாதங்கள் அதாவது 2022-ம் ஆண்டு பிப்ரவரி 27-ந்தேதி விடுதலை செய்யப்பட வாய்ப்பு உள்ளது. மேலும், அவர் பரோல் காலத்தை பயன்படுத்தினால், அவர் விடுதலை செய்யப்படும் தேதியில் மாற்றம் ஏற்படலாம்.  இவ்வாறு ஆர்.லதா கூறியுள்ளார்.

சசிகலா 27.1.2021-க்கு முன்பாக விடுதலையாக வாய்ப்பு இல்லை என்பது கர்நாடக சிறைத்துறை கடிதம் மூலம் தெரியவந்தாலும், இந்த மாத இறுதியில் சசிகலா விடுதலை ஆவார் என அவரது வக்கீல் ராஜா செந்தூர்பாண்டியன் கூறி உள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:-

சசிகலாவை பொறுத்தமட்டில் அவரது தண்டனை காலம் 14.2.2021 அன்றுடன் முடிவடைகிறது. அவர், ஏற்கனவே சிறையில் இருந்த காலத்தை கழித்து கணக்கிட்டதன் அடிப்படையில் 27.1.2021 அன்று சசிகலா விடுதலையாக சாத்தியக்கூறு உள்ளது என கர்நாடக சிறைத்துறை தெரிவித்துள்ளது.

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் எழுப்பப்படுகிற கேள்விக்கு, அன்றைய தேதியில் என்ன தகவல் இருக்கிறதோ, அதைத்தான் பதிலாக தர இயலும். அதேபோன்று, என்ன கேள்வி கேட்கப்படுகிறதோ, அதற்கு தான் பதில் தரப்படும். கர்நாடக சிறைத்துறை பதிலில், நன்னடத்தை அடிப்படையில் சசிகலாவுக்கு எந்த சலுகையும் வழங்க இயலாது என்று குறிப்பிடவில்லை.

இந்த மாத இறுதியில் சசிகலா விடுதலை ஆவதற்கு வாய்ப்புகள் அதிகமாக உள்ளதால், அந்த சூழலில் முடிவு எடுக்கப்படும். கர்நாடக சிறைத்துறை பதிலால் சசிகலா விடுதலையில் எந்த பின்னடைவும் இருக்காது. தண்டனை கைதிகளுக்கு ஒரு மாதத்துக்கு 3 நாட்கள் தண்டனை கழிக்கப்பட வேண்டும் என்று கர்நாடக சிறை விதி கூறுகிறது. இது கர்நாடக சிறையில் இருக்கும் கைதிகள் அனைவருக்கும் மறுக்காமல் அளிக்கப்படும் சலுகை தான்.

அதன்படி சசிகலா, தண்டனை குறைவு சலுகையை பெற்று இந்த மாத இறுதியில் விடுதலை ஆவதில் மாற்றம் இருக்க வாய்ப்பு இல்லை. சசிகலா செலுத்த வேண்டிய அபராத தொகையை செலுத்துவதற்கான அனைத்து ஆயத்த பணிகளையும் மேற்கொண்டு வருகிறோம். இதன் காரணமாக விடுதலை ஆவதில் எந்த தாமதமும் இருக்காது.  இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்