பாகிஸ்தானில் சீக்கிய மத தலைவரின் மகள் கடத்தி மதமாற்றம்; டெல்லியில் சீக்கியர்கள் போராட்டம்

பாகிஸ்தானில் சீக்கிய மத தலைவரின் மகள் கடத்தப்பட்ட விவகாரத்தில் டெல்லியில் உள்ள அந்நாட்டு தூதரகம் முன் சீக்கியர்கள் போராட்டம் நடத்தினர்.

Update: 2020-09-21 11:37 GMT
புதுடெல்லி,

பாகிஸ்தான் நாட்டில் ஹசன் அப்துல் சிட்டியில் வசித்து வருபவர் பிரீத்தம் சிங்.  வரலாற்று சிறப்பு பெற்ற பஞ்சா சாகிப் குருத்வாராவின் தலைவராக இருந்து வருகிறார்.  இவரது மகள் புல்பால் கவுர் (வயது 17).

கடந்த இரு வாரங்களுக்கு முன் இவரது மகள் காணாமல் போய்விட்டார்.  இதுபற்றி டெல்லியில் உள்ள சீக்கிய குருத்வாரா மேலாண்மை கமிட்டியிடம் தெரிவித்து உள்ளார்.  இந்த விவகாரம் பற்றி இந்திய வெளிவிவகார அமைச்சகத்திடம் அந்த அமைப்பு தெரிவித்து உள்ளது.

தனது மகள் மதமாற்றம் செய்யப்பட்டு இருக்க கூடும் என பிரீத்தம் அச்சம் தெரிவித்து உள்ளார்.  இந்நிலையில், சீக்கிய கமிட்டியானது, அந்த இளம்பெண் கடத்தப்பட்டு உள்ளார் என்றும் பாகிஸ்தானில் இஸ்லாமிய மதத்திற்கு அவர் மதமாற்றம் செய்யப்பட்டு விட்டார் என்றும் தெரிவித்தது.

பாகிஸ்தானில் கடந்த 9 மாதங்களில் இதுபோன்று 55க்கும் மேற்பட்ட சீக்கிய இளம்பெண்கள் கடத்தப்பட்டு கட்டாய திருமணம் செய்து வைக்கப்பட்டு உள்ளனர் என்றும் அந்த கமிட்டி அதிர்ச்சி தகவலை தெரிவித்து உள்ளது.

சீக்கிய பெண்களை மதமாற்றம் செய்யும் இந்த விவகாரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் உள்ள பாகிஸ்தான் நாட்டு தூதரகம் முன் சீக்கியர்கள் பலர் ஒன்று திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.  போராட்டத்தின்போது, பஞ்சா சாகிப் குருத்வாராவின் தலைவரது மகளை கடத்தியது ஏற்று கொள்ள முடியாதது.

அவுரங்கசீப்பின் மாநிலம் போன்று பாகிஸ்தான் உள்ளது.  இந்த விவகாரம் ஐ.நா. அமைப்புக்கு கொண்டு செல்லப்படும் என டெல்லியில் உள்ள சீக்கிய குருத்வாரா மேலாண்மை கமிட்டியின் தலைவர் எம்.எஸ். சிர்சா கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்