உத்தரபிரதேசத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும்-மாயாவதி வலியுறுத்தல்

உத்தர பிரதேசத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி வலியுறுத்தியுள்ளார்.

Update: 2020-10-02 00:39 GMT
லக்னோ, 

உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தை சேர்ந்த 19 வயது இளம்பெண் சமீபத்தில் 4 பேர் கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்டு உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. அங்குள்ள பல்ராம்பூர் மாவட்டத்திலும் கும்பல் கற்பழிப்பில் 22 வயது இளம்பெண்ணும் உயிரிழந்து உள்ளார். இந்த சம்பவங்களுக்கு பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி கண்டனம் தெரிவித்து உள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறுகையில், ‘மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு நிலை மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்களை கருத்தில் கொண்டு மத்திய அரசு முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்தை அந்த பதவியில் இருந்து நீக்கி விட்டு தகுதியான வேறொருவரை நியமிக்க வேண்டும். இல்லையெனில் உத்தரபிரதேசத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும். மற்றவர்களின் சகோதரிகளையும், மகள்களையும் உங்களது சகோதரி மற்றும் மகளாக நீங்கள் கருத வேண்டும். அவர்களை பாதுகாக்க முடியாவிட்டால் முதல்- மந்திரி பதவியில் இருந்து விலகுங்கள்’ என்று தெரிவித்தார்.

மேலும் செய்திகள்