இந்தியாவில் பாலியல் வன்முறைகள் பின்தங்கிய சமூகத்தை சேர்ந்த பெண்களே அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்; ஐ.நா. கவலை

இந்தியாவில் பாலியல் வன்முறைகள் சம்பவத்தில் பின்தங்கிய சமூகத்தை சேர்ந்த பெண்களே அதிகம் பாதிக்கப்படுகிறார்கள் என ஐ.நா. கவலை தெரிவித்து உள்ளது.

Update: 2020-10-05 18:53 GMT
புதுடெல்லி,

உத்தரபிரதேசத்தின் ஹத்ராஸ் மாவட்டத்தில் தலித் இனத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் உயர் சாதியைச் சேர்ந்த வாலிபர்கள் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த பரபரப்பு அடங்குவதற்குள் உத்தரபிரதேசத்தின் பலராம்பூர் மாவட்டத்தில் தலித் இளம்பெண் ஒருவர் கற்பழித்து கொலை செய்யப்பட்டார்.

இந்த நிலையில் இந்தியாவில் பின்தங்கிய சமூகத்தைச் சேர்ந்த பெண்கள் மற்றும் சிறுமிகளே பாலின அடிப்படையிலான வன்முறைக்கு அதிகம் ஆளாவதாக இந்தியாவுக்கான ஐ.நா. அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

ஹத்ராஸ் மற்றும் பலராம்பூரில் அண்மையில் நடந்த கற்பழிப்பு மற்றும் கொலை வழக்குகள் பின்தங்கிய சமூக குழுக்களைச் சார்ந்த பெண்கள் மற்றும் சிறுமிகள் கூடுதல் பாதிப்புகளை எதிர்கொள்கிறார்கள் என்பதையும் பாலின அடிப்படையிலான வன்முறையில் அவர்கள் அதிக ஆபத்தில் உள்ளனர் என்பதை நினைவூட்டுகிறது. பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு பாதுகாப்பு நடவடிக்கைகளை பலப்படுத்த இந்திய அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் வரவேற்கத்தக்கவை. ஆனால் அவை இன்னும் தீவிரப்படுத்தப்படவேண்டும்.

குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென்ற பிரதமரின் அழைப்பை நாங்கள் ஆதரிக்கிறோம். பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு தீர்வுகாண அரசாங்கத்துக்கும் மக்கள் சமுதாயத்திற்கு தொடர்ச்சியான ஆதரவை வழங்க உறுதியுடன் உள்ளது.  இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்