கர்நாடகத்தில் கடந்த 2019-ம் ஆண்டில் சாலை விபத்துகளில் 10,990 பேர் மரணம் - துணை முதல்-மந்திரி லட்சுமண் சவதி தகவல்

கர்நாடகத்தில் கடந்த 2019-ம் ஆண்டில் சாலை விபத்துகளில் 10,990 பேர் மரணம் அடைந்துள்ளனர் என்று துணை முதல்-மந்திரி லட்சுமண் சவதி கூறியுளளார்.

Update: 2020-10-16 08:49 GMT
பெங்களூரு, 

கர்நாடகத்தில் போக்குவரத்துத்துறை தொடர்பான ஆலோசனை கூட்டம் பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. இதில் மத்திய தரைவழி போக்குவரத்துத்துறை மந்திரி நிதின் கட்காரி காணொலி மூலம் கலந்து கொண்டு பேசினார். 

அப்போது துணை முதல்-மந்திரி லட்சுமண் சவதி கூறியதாவது:-

மைசூருவில் திறன்மிகு போக்குவரத்து முறையை நடைமுறைப்படுத்தியுள்ளோம். இதனால் அங்கு 50 சதவீத விபத்துகள் குறைந்துள்ளன. கர்நாடகத்தில் டீசல் சேமிப்பு குறித்து ஓட்டுனர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. சாலை பாதுகாப்பு மற்றும் விபத்துகளை குறைப்பது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. மேலும் அதிக விபத்துகள் நடைபெறும் பகுதிகளை கண்டறிந்து அங்கு விபத்துகளை குறைக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பஸ்கள் தற்போது எங்கு உள்ளன என்பதை கண்டறியும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் சாலை பாதுகாப்பிற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. மேலும் பஸ்களுக்கு வேக கட்டுப்பாட்டு கருவி பொருத்தப்படுகிறது.

கர்நாடகத்தில் கடந்த 2019-ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் டிசம்பர் மாதம் வரையில் 41 ஆயிரத்து 707 விபத்துகள் நடந்துள்ளன. இதில் 10 ஆயிரத்து 990 பேர் மரணம் அடைந்துள்ளனர். நடப்பு ஆண்டில் கடந்த ஜனவரி முதல் ஆகஸ்டு மாதம் வரையில் 21 ஆயிரத்து 297 விபத்துகள் நடந்துள்ளன. இதில் 5,738 பேர் இறந்துள்ளனர். ஆனால் அதிநவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி இத்தகைய விபத்துகளை தடுக்க தீவிரமான நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது.

இவ்வாறு லட்சுமண் சவதி கூறினார்.

மேலும் செய்திகள்