சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு: புதிய மேல்சாந்திகள் தேர்வு

கொரோனா ஊரடங்குக்குப் பின்னர் சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று திறக்கப்பட்டுள்ளது.

Update: 2020-10-17 08:52 GMT
சபரிமலை, 

கேரள மாநிலத்தில் புகழ் பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவில் நடை, ஐப்பசி மாத பூஜைக்காக நேற்று மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது.

இன்றுமுதல் நாள்தோறும் முன்பதிவு செய்த 250 பக்தர்கள் மட்டுமே ஐயப்பனை தரிசிக்க அனுமதிக்கப்படுகின்றனர். ஆன்லைன் வழியாக முன்பதிவு செய்து வரும் பக்தர்கள் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். பக்தர்கள் தங்களது தரிசனத்திற்கு 48 மணி நேரத்திற்கு முன்பாக எடுக்கப்பட்ட கொரோனா இல்லை என்ற சான்றிதழை கண்டிப்பாக கொண்டு வர வேண்டும். மலை ஏறும் போது முக கவசம் அணிய தேவை இல்லை. மற்ற நேரங்களில் கண்டிப்பாக முக கவசம் அணிய வேண்டும். ஆனால் மலை ஏற உடல் தகுதி இருப்பதற்கான மருத்துவ சான்றிதழ் கொண்டு வர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பம்பை ஆற்றில் குளிக்க தடை விதிக்கப்பட்ட போதிலும் பக்தர்கள் குளிக்க மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.

இதற்கிடையே, சபரிமலை மற்றும் மாளிகைபுரம் கோயில்களின் மேல்சாந்திகள் பதவிக்காலம் முடிந்த நிலையில், புதிய மேல்சாந்தி தேர்வும் நடந்து முடிந்துள்ளது. இதற்கான நேர்காணல், அக்டோபர் 5, 6 தேதிகளில் திருவனந்தபுரம் தேவசம்போர்டு தலைமையகத்தில் நடந்தது. இதில் தேர்வு செய்யப்பட்டவர்களில், புதிய மேல்சாந்திகள் இன்று காலை 8 மணிக்கு குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டனர். இதன்படி, ஏற்கனவே மாளிகைபுரம் மேல்சாந்தியாக இருந்த ஜெயராஜ் பொட்டி, சபரிமலை மேல்சாந்தியாகவும், அங்கமாலியைச் சேர்ந்த ரெஜிகுமார் மாளிகைபுரம் மேல்சாந்தியாகவும் தேர்வாகி உள்ளனர். 

மேலும் செய்திகள்