ஹரியானாவில் இளம்பெண் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கு - 3வது நபர் கைது

ஹரியானாவில் பட்டப்பகலில் இளம்பெண் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் இதுவரை 2 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது மேலும் ஒரு நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Update: 2020-10-29 11:00 GMT
சண்டிகர்,

ஹரியானா மாநிலம் பல்லாப்கர் பகுதியில் கடந்த 26 ஆம் தேதி(திங்கள்கிழமை) மதியம் 3.30 மணியளவில் கல்லூரிக்கு தேர்வு எழுதுவதற்காக வந்த பெண்ணை கல்லூரி வளாகத்திற்கு வெளியே இரண்டு நபர்கள் சுட்டுக்கொன்றனர். இந்த சம்பவம் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.

துப்பாகியால் சுடப்பட்ட அந்த பெண் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கத் தொடங்கினர்.

இதனை தொடர்ந்து உயிரிழந்த அந்த பெண்ணின் பெயர் நிகிதா(வயது 21) என்பதும், கல்லூரியில் இறுதி ஆண்டு தேர்வு எழுத வந்த அவர் கல்லூரி வளாகத்திற்கு வெளியில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக தௌஃபீக் மற்றும் ரீஹான் ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர்.

தௌஃபீக் மற்றும் ரீஹான் இருவரும் தற்போது 14 நாள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கொலை செய்யப்பட்ட பெண் நிகிதாவிற்கு தௌஃபீக் ஏற்கனெவே அறிமுகமானவர் என்று தெரிய வந்துள்ளது. தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு நிகிதாவை தௌஃபீக் வற்புறுத்தி வந்ததாக கூறப்பட்டுகிறது. இது தொடர்பாக நிகிதாவின் குடும்பத்தினர் தௌஃபீக் மீது கடந்த 2018ஆம் ஆண்டு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

இந்த வழக்கு தொடர்பாக போலீசார் நடத்திய வீசாரணையில் கொலை செய்ய பயன்படுத்திய துப்பாக்கியை அஜ்ரு என்ற நபர் வழங்கியிருப்பது தெரிய வந்துள்ளது. இதனை தொடர்ந்து அஜ்ருவை தற்போது போலீசார் கைது செய்து விசாரித்து வருகிறது.

மேலும் செய்திகள்