கொரோனா காலத்தில் உலகளவில் ஆயுர்வேத பொருட்களின் தேவை அதிகரித்தது - பிரதமர் மோடி

கொரோனா காலத்தில் உலகளவில் ஆயுர்வேத பொருட்களின் தேவை அதிகரித்ததாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

Update: 2020-11-13 08:31 GMT
புதுடெல்லி,

தன்வந்திரி ஜெயந்தியான நவம்பர் 13ஆம் தேதி தேசிய ஆயுர்வேத தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. அந்த வகையில் இன்று ஐந்தாவது ஆயுர்வேத தினம் கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி இன்று இரண்டு ஆயுர்வேத கல்வி நிறுவனங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். 

குஜராத்தின் ஜாம்நகரில் உள்ள ஆயுர்வேத கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் ஜெய்ப்பூரின் தேசிய ஆயுர்வேத நிறுவனம் ஆகியவற்றை பிரதமர் மோடி டெல்லியில் இருந்தபடி காணொளி வாயிலாக துவக்கி வைத்தார். குஜராத்தில் நடந்த விழாவில் முதல்வர் விஜய் ரூபானி மற்றும் ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்த விழாவில் முதல்வர் அசோக் கெலாட் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியின் போது பிரதமர் மோடி பேசியதாவது;-

“இன்றைய காலத்தில் அனைத்து அறிவியல் வளர்ச்சிகளும் ஒருங்கிணைக்கப்பட்டு வருகின்றன. இந்த அணுகுமுறையின் காரணமாக ஆயுர்வேதம் தற்போதைய மருத்துவ உலகில் முக்கிய பங்கு வகிக்கிறது. அலோபதி மற்றும் ஆயுர்வேத நடைமுறைகள் இனி ஒன்றாக கைகோர்க்கும். முதன்முறையாக, நமது பண்டைய இந்தியாவின் அறிவியல், 21 ஆம் நூற்றாண்டின் அறிவியலுடன் ஒருங்கிணைக்கப்படுகிறது” என்று தெரிவித்தார்.

மேலும் பாரம்பரிய மருந்துகள் குறித்த ஆராய்ச்சியை வலுப்படுத்துவதற்காக, உலக சுகாதார நிறுவனம் இந்தியாவில் பாரம்பரிய மருத்துவம் குறித்த உலகளாவிய மையத்தை நிறுவ இருப்பதாக தெரிவித்த பிரதமர் மோடி, கொரோனா காலத்தில் ஆயுர்வேத தயாரிப்புகளுக்கான தேவை உலகளவில் அதிகரித்ததாக குறிப்பிட்டார்.

நமது நாட்டில் ஒவ்வொரு வீட்டிலும் மஞ்சள் பால், அஸ்வகந்தா மூலிகை, காதா போன்ற நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் உணவுகளை உட்கொள்கிறார்கள் என்றும் இதன் காரணமாக நம் நாடு அதிக மக்கள் தொகை கொண்டதாக இருந்தாலும், கொரோனா பாதிப்பு கட்டுப்பாட்டில் உள்ளது என்று அவர் தெரிவித்தார். 

மேலும் செய்திகள்