சமூக ஊடகங்களில் அவதூறு பரப்பினால் 5 ஆண்டு சிறை ஏன்? கேரள முதல் மந்திரி விளக்கம்

சமூக ஊடகங்களில் அவதூறு பரப்பினால் 5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கும் காவல் துறை சட்ட திருத்தம் கொண்டு வந்தது பற்றி கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் விளக்கம் அளித்துள்ளார்.

Update: 2020-11-23 10:23 GMT
திருவனந்தபுரம்,

கேரளாவில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்புவதை தடுக்கும் வகையில் கேரள போலீஸ் சட்டம் திருத்தப்பட்டு உள்ளது.  அதன்படி, இந்த சைபர் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், பத்தாயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கும் போலீஸ் சட்ட திருத்தத்தை கேரள அரசு கொண்டு வந்தது.

ஆனால் இந்த சட்ட திருத்தம், கருத்து சுதந்திரத்துக்கு எதிரானது என பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.  இது குறித்து கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் விளக்கம் அளித்துள்ளார்.  அதில், பத்திரிகை சுதந்திரம் என்ற பெயரில் தனிநபர் சுதந்திரம் பறிக்கப்படக்கூடாது. அதேபோல் தனிநபர் சுதந்திரம் என்ற பெயரில் பத்திரிகை சுதந்திரம் மறுக்கக்கூடாது.

இந்த இரண்டையும் பாதுகாக்கும் கடமை, அரசுக்கு உள்ளது. அந்தவகையில் தனிநபர் கண்ணியத்தை மீறுவோருக்கு எதிராக சர்வதேச தரத்திலான நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இத்தகைய விதிமீறலில் ஈடுபடுவோருக்கு எதிராகவே கேரள போலீஸ் சட்டம் திருத்தப்பட்டு உள்ளது.  சமூக ஊடகங்கள் மூலம் அவதூறு பரப்பப்படுவதாக ஏராளமான புகார்கள் வருகின்றன.

உண்மைக்கு மாறான தகவல்கள் மூலம் அவதூறு பரப்புவதால், ஏராளமான குடும்பங்கள் பாதிக்கப்படுகின்றன. அதன் காரணமாகவே சட்டத்தை கடுமையாக்கினோம். இச்சட்டம் பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்தை தடுக்காது.  கேரளாவில் குடும்பங்களின் ஒற்றுமை பாதிக்கப்பட கூடிய சம்பவங்களும் நடந்துள்ளன.

இதனால் தற்கொலை முடிவுகள் கூட எடுக்கப்பட்டு உள்ளன.  இந்த விவகாரங்கள் சட்டபூர்வ முறையில் தீர்க்கப்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டு உள்ளது என்று ஊடக நிறுவன தலைமையிடம் இருந்தும் கோரிக்கைகள் எழுந்தன.  இதனால் கேரள போலீஸ் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது என அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்