அசாம் முன்னாள் முதல்-மந்திரி தருண் கோகாய் மறைவு: பிரதமர் மோடி இரங்கல்

அசாம் முன்னாள் முதல்-மந்திரி தருண் கோகாய் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

Update: 2020-11-23 13:57 GMT
புதுடெல்லி,

அசாம் மாநில காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் அம்மாநில முதல்வராக 3 முறை பதவி வகித்தவருமான தருண் கோகாய் (வயது 82) கடந்த ஆகஸ்ட் 25ந்தேதி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார்.  தொற்று பாதிப்பில் இருந்து குணம் அடைந்த பிறகு, கொரோனாவுக்கு பிந்தைய பாதிப்புகளுக்காக சிகிச்சை பெற்று வந்த தருண் கோகாய், கடந்த அக்டோபர் மாதம் 25ந்தேதி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். 

இதையடுத்து, மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதன் காரணமாக, கடந்த 1ந்தேதி மீண்டும் தருண் கோகாய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில், தருண் கோகாய் உடல் நிலை மிகவும் மோசம் அடைந்துள்ளதாக அசாம் மாநில சுகாதாரத்துறை மந்திரி கூறினார். மெக்கானிக்கல் வெண்டிலேஷன் உதவியுடன்  தருண் கோகாய்க்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அவருக்கு பல உடல் உறுப்புகள் பாதிப்பு ஏற்பட்டு இருந்தது.  இந்த நிலையில் தொடர் சிகிச்சை பலனின்றி தருண் கோகாய் இன்று காலமானார்.

இந்த நிலையில் அசாம் முன்னாள் முதல்-மந்திரி தருண் கோகாய் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறப்பட்டிருப்பதாவது:-

"தருண் கோகோய் மூத்த தலைவராகவும், மூத்த நிர்வாகியாகவும் இருந்தவர், அவர் அசாம் மற்றும் மத்திய அரசியலில் பல ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். அவரது மறைவு மிகுந்த வருத்தமளிக்கிறது. அவரது மறைவால் ஆழ்ந்த சோகத்தில் உள்ள குடும்பத்தினர் மற்றும் ஆதரவாளர்களுக்கு உறுதுணையாக உள்ளேன்." என தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்