டெல்லியில் கடந்த 17 ஆண்டுகளில் இல்லாத அளவு கடும் குளிர் !

இந்த நவம்பர் மாதத்தின் நேற்றைய தினம், கடந்த 17 ஆண்டுகளில் இல்லாத நவம்பர் மாத குளிரை பதிவு செய்துள்ளது.

Update: 2020-11-23 21:11 GMT
புதுடெல்லி, 

தலைநகர் டெல்லி, குளிருக்கு பெயர்போன நகரங்களில் ஒன்று. இங்கு குளிரின் நிலை ஆண்டுக்கு ஆண்டு மாறுபடும். இந்த ஆண்டு சற்று அதிகமாகவே குளிர் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் கடந்த அக்டோபர் மாதம், முந்தைய ஆண்டுகளின் அக்டோபர் மாதத்தைவிட அதிக அளவு குளிரை பதிவு செய்தது. 

இதைப்போல இந்த நவம்பர் மாதத்தின் நேற்றைய தினம், கடந்த 17 ஆண்டுகளில் இல்லாத நவம்பர் மாத குளிரை பதிவு செய்துள்ளது. நேற்று காலை தலைநகரின் குறைந்தபட்ச வெப்பநிலை 6.3 டிகிரி செல்சியஸ் ஆகும். இன்னும் சில தினங்களில் இது மேலும் குறையலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முன்பு கடந்த 1938-ம் ஆண்டு நவம்பர் 28-ந் தேதி 3.9 டிகிரியாக வெப்பநிலை இருந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

“மார்கழி பனி மச்சியைத் துளைக்கும்” என்று பழமொழி கூறுவார்கள். டெல்லியில் நவம்பர் (கார்த்திகை) மாத குளிரே இப்படி என்றால் அடுத்து வரும் டிசம்பர், ஜனவரி (மார்கழி) மாத குளிர் மிகக் கடுமையாக இருக்கும் என்று எண்ணி, அதை எதிர்கொள்வதற்கான ஆயத்தப்பணிகளை டெல்லி மக்கள் மேற்கொண்டு வருகிறார்கள்.

மேலும் செய்திகள்