பீகாரில் புதிதாக பதவியேற்ற நிதிஷ்குமார் அரசை கவிழ்க்க சதி?

பீகாரில் புதிதாக பதவியேற்ற நிதிஷ்குமார் அரசை கவிழ்ப்பதற்காக பா.ஜனதா எம்.எல்.ஏ. ஒருவரிடம் லாலு பிரசாத் யாதவ் பேரம் பேசியதாக கூறப்படும் ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2020-11-25 20:15 GMT
பாட்னா, 

பீகாரில் சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் பா.ஜனதா-ஐக்கிய ஜனதாதளம் இணைந்த தேசிய ஜனநாயக கூட்டணி மொத்தமுள்ள 243 இடங்களில் 126 இடங்களை பெற்று ஆட்சியை தக்க வைத்தது. இந்த கூட்டணி சார்பில் நிதிஷ்குமார் முதல்-மந்திரியாக பதவியேற்றுள்ளார். இந்த தேர்தலில் லாலு பிரசாத்தின் ராஷ்ட்ரீய ஜனதாதளம், காங்கிரஸ் இணைந்த மெகா கூட்டணிக்கு 110 இடங்களே கிடைத்தன. அங்கு சட்டசபையின் புதிய சபாநாயகராக பா.ஜனதாவின் விஜய் குமார் சின்கா தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார்.

முன்னதாக சபாநாயகர் தேர்தலில் தங்கள் கூட்டணிக்கு வாக்களிக்குமாறு தன்னிடம், லாலு பிரசாத் யாதவ் தொலைபேசி மூலம் பேசியதாக பா.ஜனதா எம்.எல்.ஏ. லாலன் குமார் நேற்று குற்றம் சாட்டினார். இந்த உரையாடல் அடங்கிய ஆடியோ பதிவு ஒன்றை மாநிலத்தின் முன்னாள் துணை முதல்-மந்திரியும், பா.ஜனதா தலைவருமான சுஷில் மோடி வெளியிட்டுள்ளார்.

அதில் லாலு பிரசாத் யாதவ், ‘உங்களை நாங்கள் நன்றாக பார்த்துக்கொள்வோம். நடைபெற உள்ள சபாநாயகர் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளரை தோற்கடிக்க உதவுங்கள்’ என்று கோரிக்கை விடுக்கிறார்.ஆனால் சொந்த கட்சி வேட்பாளரை எதிர்த்து ஓட்டுபோட்டால் பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரும் என லாலன் குமார் பதிலளிக்கிறார். உடனே லாலு, ‘அதற்காக நீங்கள் கவலைப்பட வேண்டாம். எங்கள் கட்சி சார்பில் சபாநாயகர் தேர்ந்தெடுக்கப்படுவார். மேலும் இந்த அரசை கவிழ்த்தவுடன் உங்களுக்கு சன்மானமும் அளிப்போம்’ என்று கூறுகிறார்.இவ்வாறு அந்த உரையாடல் நடந்துள்ளது. 

சுஷில் மோடி முன்னிலையில் இந்த உரையாடல் நடந்ததாக லாலன் குமார் எம்.எல்.ஏ. செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இந்த விவகாரம் மாநில அரசியலில் பெரும் புயலை கிளப்பி இருக்கிறது. கால்நடை தீவன ஊழல் வழக்கில் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் லாலு பிரசாத் யாதவ், பீகார் அரசை கவிழ்க்க சதி செய்திருப்பதாக கூறப்படும் விவகாரம் மாநிலம் முழுவதும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. இந்த செயலை வன்மையாக கண்டித்துள்ள மாநில துணை முதல்-மந்திரி தர்கிஷோர் பிரசாத், இந்த விவகாரத்தில் தேவைப்பட்டால் உயர்மட்ட விசாரணை நடத்த மத்திய அரசை கேட்டுக்கொள்வோம் என்று கூறினார்.

மேலும் செய்திகள்