சபரிமலையில் கூடுதல் பக்தர்களை அனுமதிக்க திட்டம்

சபரிமலையில், வேலை நாட்களில் 2 ஆயிரம் பக்தர்களையும், வார விடுமுறை நாட்களில் 3 ஆயிரம் பக்தர்களையும் அனுமதிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தேவசம்போர்டு தலைவர் வாசு தெரிவித்துள்ளார்.

Update: 2020-11-28 13:33 GMT
திருவனந்தபுரம்,

கொரோனா ஊரடங்கு காரணமாக சபரிமலையில் தினமும் ஆயிரம் பக்தர்களும் சனி ஞாயிறு நாட்களில் 2000 பக்தர்களும் அனுமதிக்கப்படுகின்றனர். இந்த நிலையில்,பக்தர்களின் வருகை குறைந்ததன் காரணமாக வருமானம் பாதிக்கப்பட்டுள்ளதால், பக்தர்களின் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும் என திருவிதாங்கூர் தேவசம் போர்டு கேரள அரசை வலியுறுத்தி வந்தது.

அதனை பரிசீலனை செய்த கேரள அரசு சபரிமலையில் அனுமதிக்கப்படும் பக்தர்களின் எண்ணிக்கையை உயர்த்த திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. வேலை நாட்களில் 2000 பக்தர்களையும், வார விடுமுறை நாட்களில் 3 ஆயிரம் பக்தர்களையும் அனுமதிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தேவசம்போர்டு தலைவர் வாசு தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு மண்டல பூஜைக்காக சபரிமலை நடை திறந்த பிறகு 2 கோடி ரூபாய் மட்டுமே வருமானம் ஈட்டியுள்ளதாகவும், இது கடந்த ஆண்டின் அதே காலத்தில் 48 கோடி ரூபாயாக இருந்ததாகவும் தேவசம்போர்டு தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்