எல்லை பிரச்சினையை தீர்க்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது; ராணுவ தளபதி நரவனே தகவல்

இந்தியா-சீனா இடையிலான எல்லை பிரச்சினையை தீர்க்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக ராணுவ தளபதி நரவனே தெரிவித்தார்.

Update: 2020-11-29 01:14 GMT
கண்ணூர், 

லடாக்கில் சீன படைகள் மேற்கொண்ட ஊடுருவல் முயற்சியால் இரு நாடுகளுக்கு இடையே கடந்த மே, ஜூன் மாதங்களில் மோதல் ஏற்பட்டது. இதனால் விளைந்த பதற்றம் இரு நாட்டு எல்லையில் இன்னும் நீடித்து வருகிறது. 

இரு நாடுகளும் தலா 50 ஆயிரத்துக்கு மேற்பட்ட படைகளையும், போர் தளவாடங்களையும் எல்லையில் குவித்துள்ளன. அங்கு பதற்றத்தை தணித்து அமைதி மற்றும் நிலைத்தன்மையை நிலைநாட்டுவதற்கு இரு நாடுகளும் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இதற்காக இரு நாடுகளும் ராணுவ அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தையை நடத்தி வருகின்றன.

இந்த நிலையில் கேரள மாநிலம் கண்ணூர் அருகே எழிமலா பகுதியில் உள்ள இந்திய கடற்படை அகாடமியில் பயிற்சி முடித்த வீரர்களின் அணிவகுப்பை பார்வையிடுவதற்காக ராணுவ தளபதி மனோஜ் முகுந்த் நரவனே நேற்று வந்தார். இந்த நிகழ்ச்சிக்கு பின் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது இந்தியா-சீனா எல்லை பிரச்சினை குறித்து செய்தியாளர்கள் அவரிடம் கேட்டனர். அதற்கு அவர் பதில் அளிக்கையில், ‘இந்தியா-சீனா இடையிலான எல்லை பிரச்சினையை சுமுகமாக தீர்ப்பதற்காக இரு நாடுகளுக்கு இடையே பேச்சுவார்த்தை நடந்து வருகிறது’ என்று தெரிவித்தார்.

அவர் மேலும் கூறும்போது, ‘எல்லையில், அண்டை நாடுகளின் பயங்கரவாதிகள் மூலமான அச்சுறுத்தல் மற்றும் உள்நாட்டு போதைப்பொருள் கும்பலின் அட்டூழியங்களை இந்திய படைகள் ஒரே நேரத்தில் எதிர்கொண்டு வருகின்றன. ஆனால் இந்த அச்சுறுத்தல் மற்றும் சவால்களை எதிர்கொள்வதற்கான திறனை நமது படைகள் பெற்றிருக்கின்றன’ என்று தெரிவித்தார்.

கடற்படை மற்றும் கடலோர காவல்படை வீரர்களுக்கு சிறப்பான பயிற்சி அளிப்பதற்கான திறனை இந்த கடற்படை அகாடமி பெற்றிருப்பதாக நரவனே பாராட்டும் தெரிவித்தார். கடற்படை வீரர்களின் பயிற்சி அணிவகுப்பு நிகழ்ச்சியில் கடற்படை அதிகாரிகள் ஹம்பிஹோலி, தருண் சோப்தி மற்றும் அகாடமி முதல்வர் நூர் ஆகியோரும் பங்கேற்றனர்.

மேலும் செய்திகள்