கேரளாவில் கொரோனா தடுப்பூசி இலவசமாக போடப்படும் - பினராயி விஜயன் அறிவிப்பு

கேரளாவில் கொரோனா வைரஸ் நோய்த் தொற்றுக்கான தடுப்பூசி இலவசமாக போடப்படும் என அம்மாநில முதல்-மந்திரி பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

Update: 2020-12-12 16:46 GMT
புதுடெல்லி,

இந்தியாவில் தடுப்பூசி பயன்பாட்டிற்கான  ஒப்புதல்கள் மிக விரைவில் கிடைக்கும்  என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில், சீரம் இன்ஸ்டிட்யூட் ஆப் இந்தியா, பாரத் பயோடெக், ஜைடஸ் கேடிலா உள்ளிட்ட 5 நிறுவனங்கள் தடுப்பூசியை மருத்துவ அவசர பயன்பாட்டுக்குக் கொண்டு வர அனுமதி கோரி விண்ணப்பித்து உள்ளன.

இந்நிலையில், மத்திய அரசு தடுப்பூசி வழங்குவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. 112 பக்கங்கள் கொண்ட அந்த ஆவணத்தில் பல்வேறு அம்சங்கள் சுட்டிக் காட்டப்பட்டுள்ளன. தடுப்பூசிகளைப் பாதுகாக்க குளிர்பதன கிடங்குகளை அமைக்க மாநில அரசுகளுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

மத்திய அரசு தடுப்பூசி வழங்குவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் வெளியிட்டு உள்ளது. ஒரு தடுப்பூசி மையத்தில் 100 பேருக்கு மட்டுமே தடுப்பூசி போட்டப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்தநிலையில் கொரோனா பாதிப்பு நிலவரம் தொடர்பாக கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, கேரளத்தில் கொரோனா வைரஸ் நோய்த் தொற்றுக்கான தடுப்பூசி இலவசமாக போடப்படும். கொரோனா தடுப்பூசிக்கு யாரிடமும் கட்டணம் வசூலிக்கப்படாது என்றும் இதுவே அரசின் நிலைப்பாடு என்றும் அவர் தெரிவித்தார்.

ஏற்கெனவே தமிழகம், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்கள் கொரோனா தடுப்பூசி இலவசமாக போடப்படும் என்று அறிவித்துள்ள நிலையில், சமீபத்திய மாநிலமாக கேரள அரசும் தற்போது அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்