இரவு ஊரடங்கின் போது நீண்ட தூரம் செல்லும் பேருந்துகளுக்கு அனுமதி உண்டா? கர்நாடக அரசு விளக்கம்

கர்நாடகாவில் நாளை (டிச.24) இரவு முதல் ஜனவரி 2 ஆம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

Update: 2020-12-23 13:54 GMT
பெங்களூரு,

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று படிப்படியாக குறைந்து வருகிறது. எனினும், இங்கிலாந்தில் தற்போது கண்டறியப்பட்டுள்ள உருமாறிய புதிய வீரியம் மிக்க கொரோனா வைரஸ், பிற நாடுகளுக்கும் பரவலாம் என்பதால் இந்தியாவிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில், மராட்டியம் மற்றும் கர்நாடக ஆகிய மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல் படுத்தப்பட்டுள்ளது. 

கர்நாடகாவில்   நாளை (24 ஆம் தேதி ) இரவு முதல் ஜனவரி 2 ஆம் தேதி வரை இரவு 11 மணி முதல் காலை 6 மணி ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக கர்நாடக முதல்வர் எடியூரப்பா அறிவித்தார். 

இந்த நிலையில், ஊரடங்கின் போது அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என கர்நாடக மாநில முதல்வர் அலுவலகம் தெரிவித்துள்ளது. தனிநபர்களின் நடமாட்டம் முற்றிலுமாக கட்டுப்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், சரக்கு போக்குவரத்து மற்றும் நீண்ட தூரம் செல்லும் பேருந்து, ரெயில், விமான போக்குவரத்திற்கு எந்த கட்டுப்பாடுகளும் கிடையாது எனவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல், 24 மணி நேரம் இயங்கும் தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்களின் பணியாளர்கள் செல்ல அனுமதி அளிக்கப்படும். கிறிஸ்துமஸ் இரவு அன்று எந்த இடையூறும் இல்லாமல் பிரார்த்தனை செய்ய அனுமதி உண்டு எனவும் முதல்வர் அலுவலகம் தெரிவித்துள்ளது. 

மேலும் செய்திகள்