தமிழகத்தில் உள்ளது போல் கர்நாடகத்தில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் தரம் உயர்த்தப்படும் - சுகாதாரத்துறை மந்திரி சுதாகர்

தமிழகத்தில் உள்ளது போல் கர்நாடகத்தில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் தரம் உயர்த்தப்படும் என்று சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் கூறினார்.

Update: 2020-12-25 02:45 GMT
பெங்களூரு, 

கர்நாடகத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களை மேம்படுத்துவது குறித்து முதல்-மந்திரி எடியூரப்பா, சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் மற்றும் அத்துறை உயர் அதிகாரிகளுடன் பெங்களூருவில் நேற்று ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்ட அம்சங்கள் குறித்து சுதாகர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

சுகாதாரத்துறையில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஒவ்வொருவருக்கும் தரமான மருத்துவ சிகிச்சை கிடைக்க வேண்டும். மருத்துவ அடிப்படை கட்டமைப்பு வசதிகள், டாக்டர்கள் பற்றாக்குறையை நீக்குவது, சுகாதார பணியாளர்களை நியமனம் செய்வது போன்ற பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நாட்டிலேயே கேரளா மற்றும் தமிழகத்தில் சரியான கட்டமைப்பு வசதிகளுடன் ஆரம்ப சுகாதார மையங்கள் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில் உள்ளது போல் கர்நாடகத்திலும் ஆரம்ப சுகாதார நிலையங்களை தரம் உயர்த்த அரசு உறுதி பூண்டுள்ளது.

கர்நாடகத்தில் தற்போது 30 ஆயிரம் பேருக்கு ஒரு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. எங்காவது ஏற்றத்தாழ்வுகள் இருந்தால் அந்த பகுதிகளில் புதிய ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைக்கப்படும். தற்போது உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களை தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும். ஒவ்வொரு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கும் 4 டாக்டர்கள் நியமனம் செய்யப்படுவார்கள். ஆரம்ப சுகாதார நிலையங்களில் படுக்கைகளின் எண்ணிக்கையை 12 ஆக உயர்த்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

டாக்டர்கள் கிராமப்புறங்களுக்கு சென்று பணியாற்ற தயங்குகிறார்கள். அதற்கு காரணம் என்ன என்பதை கண்டறிந்துள்ளோம். அவர்களுக்கு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்திலேயே டாக்டர்கள், நர்சுகள் மற்றும் பணியாளர்களுக்கு தரமான குடியிருப்பு வசதியை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. புதிதாக ஒரு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க 2 ஏக்கர் நிலம் தேவைப்படுகிறது. ஒன்றுக்கு ரூ.8 கோடி செலவாகும். இதில் தாய்-சேய் பிரிவு, ஆய்வகம் உள்ளிட்டவைகளை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

சர்க்கரை உள்ளிட்ட ரத்த பரிசோதனைகளை பொதுமக்கள் இலவசமாக செய்து கொள்ளலாம். கிராமப்புறங்களில் 40 வயதுக்கு மேற்பட்டவர்கள், கட்டாயம் ரத்த பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். 80 ஆயிரம் மக்கள்தொகைக்கு ஒரு சமுதாய சுகாதார மையங்கள் செயல்பட்டு வருகின்றன. ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு தலா ஒரு ஆம்புலன்ஸ் வாகனம் வழங்கப்படும். தற்போது 1 லட்சம் பேருக்கு ஒரு ஆம்புலன்ஸ் உள்ளது. 

இவ்வாறு சுதாகர் கூறினார்.

மேலும் செய்திகள்