தேசத்துரோக வழக்கில் நடிகை கங்கனா ரணாவத்திடம் போலீசார் விசாரணை

தேசத்துரோக வழக்கு தொடர்பாக நடிகை கங்கனா ரணாவத்திடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

Update: 2021-01-08 19:47 GMT
மும்பை,

நடிகை கங்கனா ரணாவத் மற்றும் அவரது சகோதரி ரங்கோலி ஆகியோர் சமூகவலைதளங்களில் இரு சமூகத்தினர் இடையே வன்முறையை தூண்டும் வகையில் கருத்து கூறியதாக காஸ்டிங் இயக்குனர் முனாவர் அலி செய்யது என்பவர் மும்பை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் மனு தாக்கல் செய்து இருந்தார். இதை விசாரித்த கோர்ட்டு நடிகை கங்கனா ரணாவத் மற்றும் அவரது சகோதரி மீது வழக்குப்பதிவு செய்ய பாந்திரா போலீசாருக்கு உத்தரவிட்டது.

இதையடுத்து பாந்திரா போலீசார் தேசத்துரோகம், இருசமூகத்தினர் இடையே மோதலை தூண்டும் வகையில் பேசுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் நடிகை கங்கனா ரணாவத் மற்றும் அவரது சகோதரி மீது வழக்குப்பதிவு செய்தனர்.

இதையடுத்து வழக்கு விசாரணைக்கு ஆஜராக நடிகை கங்கனா ரணாவத்திற்கு மும்பை போலீசார் 3 முறை சம்மன் அனுப்பினர். ஆனால் அவர் ஆஜராகவில்லை. மேலும் அவரை ஜனவரி மாதம் விசாரணைக்கு ஆஜராக உத்தரவிட்ட மும்பை ஐகோா்ட்டு, அதுவரை அவரை கைது செய்யவும் தடை விதித்து உத்தரவிட்டு இருந்தது.

இந்தநிலையில் அவர் நேற்று மதியம் 1 மணியளவில் ஒய்-பிளஸ் பாதுகாப்புடன் பாந்திரா போலீஸ் நிலையத்திற்கு விசாரணைக்கு வந்தார். இதில், நடிகை கங்கனா ரணாவத்திடம் போலீசார் வழக்கு தொடர்பாக சுமார் 2 மணி நேரம் விசாரணை நடத்தினர். பின்னர் அவர் விசாரணை முடிந்து போபாலுக்கு புறப்பட்டு சென்றார்.

மேலும் செய்திகள்