கொரோனா தடுப்பூசி விவகாரம்: மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை

அனைத்து மாநில முதல்-மந்திரிகளுடன் காணொலி காட்சி மூலமாக பிரதமர் மோடி இன்று ஆலோசனை நடத்துகிறார்.

Update: 2021-01-11 01:24 GMT
புதுடெல்லி,

கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் விரைவில் தொடங்க இருக்கும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி இன்று (திங்கட்கிழமை) மாலை 4 மணிக்கு அனைத்து மாநில முதல்-மந்திரிகளுடன் காணொலி காட்சி மூலமாக ஆலோசனை நடத்துகிறார். இதில் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் கலந்துகொள்கிறார்.

கொரோனா தடுப்பூசி போடுவதற்கான ஏற்பாடுகளை மாநில அரசுகள் எவ்வாறு செய்துள்ளன? அதற்காக எவ்வாறு தங்களை தயார்படுத்தியுள்ளன? மாநிலங்களில் கொரோனா பாதிப்பு நிலவரம் எவ்வாறு இருக்கிறது? முறையாக தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளனவா? பரிசோதனைகள் போதுமான அளவு செய்யப்படுகிறதா? என்பதை முதல்-மந்திரிகளிடம், பிரதமர் மோடி கேட்டு அறிந்துகொள்கிறார்.

மேலும் கொரோனா தடுப்பூசி போடும்போது மாநில அரசுகள் கையாள வேண்டிய வழிமுறைகள் குறித்தும் பிரதமர் மோடி, முதல்-மந்திரிகளுக்கு ஆலோசனை வழங்குகிறார்.

‘கோவிஷீல்டு', ‘கோவேக்சின்' ஆகிய 2 தடுப்பூசிகளை அவசர பயன்பாட்டுக்கு பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்ட பிறகு, மாநில முதல்-மந்திரிகளை பிரதமர் மோடி சந்தித்து பேசுவது இதுவே முதல் முறையாகும்.

மேலும் செய்திகள்