இலவச கொரோனா தடுப்பூசி திட்டம் தேர்தல் நாடகம்: மம்தா பானர்ஜியை சாடிய பா.ஜ.க.

மேற்கு வங்காளத்தில் அனைவருக்கும் இலவச கொரோனா தடுப்பூசி என்ற முதல் மந்திரி மம்தா பானர்ஜியின் அறிவிப்பு தேர்தல் நாடகம் என பா.ஜ.க. கூறியுள்ளது.

Update: 2021-01-11 02:43 GMT
கொல்கத்தா,

இந்தியாவில் கொரோனா பாதிப்புகளை கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடுவதற்கான பணிகள் நடந்து வருகின்றன.  இதன்படி, வருகிற 16ந்தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடப்படும் என அரசு அறிவித்து உள்ளது.

முதலில், சுகாதார பணியாளர்கள், 50 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், நோய்வாய்ப்பட்டவர்கள் என முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி போடுவதற்கு அரசு முடிவு செய்துள்ளது.

மேற்கு வங்காளத்தில் முதல் மந்திரி மம்தா பானர்ஜி நேற்று கூறும்பொழுது, மாநிலத்தில் உள்ள மக்கள் அனைவருக்கும் இலவச கொரோனா தடுப்பூசி போடுவதற்கான நடவடிக்கைகளை எங்களுடைய அரசு எடுத்து வருகிறது.  இதனை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் என கூறினார்.

மேற்கு வங்காளத்தில் இந்த வருடம் 294 உறுப்பினர்களை கொண்ட சட்டசபைக்கு தேர்தல் நடைபெற உள்ளது.  நடப்பு அரசின் பதவி காலம் வரும் மே 30ல் முடிவுக்கு வருகிறது.  இதனால் தேர்தலை முன்னிட்டு மம்தா இதுபோன்ற அறிவிப்புகளை வெளியிடுகிறார் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுபற்றி மேற்கு வங்காள பா.ஜ.க. தலைவர் திலீப் கோஷ் கூறும்பொழுது, சட்டசபை தேர்தல் வரவுள்ள நேரத்தில், மத்திய அரசின் திட்டங்கள் மற்றும் கொரோனா தடுப்பூசி ஆகியவற்றை, தனது பெயரின் கீழ் விளம்பரப்படுத்த மம்தா பானர்ஜி முயற்சிக்கிறார் என குற்றச்சாட்டாக கூறியுள்ளார்.

சட்டசபை தேர்தலை முன்னிட்டு டிகாஸ்ரீ அல்லது மம்தாஸ்ரீ என பெயர் மாற்றம் செய்து தடுப்பூசியை விளம்பரப்படுத்த அவர் விரும்புகிறார்.  பானர்ஜி, மத்திய அரசு திட்டங்களின் பெயர்களை மாற்றி அவரது சொந்த பெயரில் நடைமுறைப்படுத்துகிறார்.  ஆனால் அது தேவையற்றது என கோஷ் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்