ரூ.1,000 கோடி ஹவாலா மோசடி: சீனாவை சேர்ந்த 2 பேர் டெல்லியில் கைது; அமலாக்கத்துறை நடவடிக்கை

ரூ.1,000 கோடி ஹவாலா மோசடி வழக்கில் சீனாவை சேர்ந்த 2 பேரை அமலாக்கத்துறை டெல்லியில் கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளது.

Update: 2021-01-17 21:51 GMT

புதுடெல்லி,

சீனாவை சேர்ந்த சார்லி பெங் என்ற லூவோ சாங் (வயது 42) மற்றும் கார்ட்டர் லீ ஆகிய இருவரும் இந்தியாவில் போலி மற்றும் சந்தேகத்துக்குரிய நிறுவனங்கள் மூலம் ரூ.1,000 கோடி அளவுக்கு மோசடியில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த மோசடி தொடர்பாக வருமான வரித்துறை கடந்த ஆண்டு முதல் விசாரணை நடத்தி வருகிறது.

இந்தியாவின் போலி பாஸ்போர்ட்டுகளை வைத்திருக்கும் இந்த 2 பேரும் பல்வேறு போலி பெயர்களில் 40-க்கும் மேற்பட்ட வங்கி கணக்குகளை தொடங்கி ரூ.1,000 கோடி அளவுக்கு ஹவாலா பணத்தை பரிமாற்றம் செய்திருக்கின்றனர். இதற்கு இந்தியாவை சேர்ந்த சிலரும், வங்கி அதிகாரிகள் பலரும் உடந்தையாக இருந்துள்ளனர்.

இந்த வங்கி அதிகாரிகள் மற்றும் மேற்படி சீனர்களின் நெருக்கமானவர்கள் என சந்தேகிக்கப்படும் நபர்களின் வீடுகளில் கடந்த ஆகஸ்டு மாதம் வருமான வரித்துறை சோதனையும் நடத்தியது. இதில் மேற்படி மோசடி உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து அவர்கள் மீதான விசாரணை தீவிரப்படுத்தப்பட்டு இருந்தது.

இந்த விவகாரத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகளும் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். குறிப்பாக நிதி மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் அவர்கள் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு இருந்தது.

இந்த வழக்கில் சார்லி பெங் மற்றும் கார்ட்டர் லீ ஆகிய இருவரையும் அமலாக்கத்துறை அதிகாரிகள் டெல்லியில் கைது செய்துள்ளனர். உள்ளூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட இருவரும் 14 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர்.

மேலும் செய்திகள்