கோவேக்சின், கோவிஷீல்டு மருந்து பாதுகாப்பானவை; கொரோனா தடுப்பூசி குறித்து அவதூறு பரப்பினால் நடவடிக்கை; மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்

கொரோனா தடுப்பூசி குறித்து வதந்தி பரப்புவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்குமாறு மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.

Update: 2021-01-25 23:36 GMT
2 தடுப்பூசிகள்
இந்தியாவில் கொரோனாவை வேரறுக்கும் வகையில் கடந்த 16-ந் தேதி முதல் தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கி இருக்கின்றன. உலக அளவில் இந்த மாபெரும் தடுப்பூசி திட்டத்தில் முதற்கட்டமாக சுகாதார பணியாளர்கள், கொரோனா முன்கள வீரர்கள் என 3 கோடி பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

இதற்காக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட பாரத் பயோடெக் நிறுவனத்தின் ‘கோவேக்சின்’ மற்றும் சீரம் நிறுவனம் தயாரித்த ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ரா ஜெனேகா நிறுவனங்களின் ‘கோவிஷீல்டு’ ஆகிய 2 தடுப்பூசிகள் பயனாளர்களுக்கு போடப்பட்டு வருகின்றன.

இந்த திட்டத்தின் மூலம் இதுவரை சுமார் 18 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு இருக்கிறது. நாடு முழுவதிலும் உள்ள சுகாதார மற்றும் முன்கள பணியாளர்கள் ஆர்வமாக தடுப்பூசி போட்டு வருகின்றனர்.

வதந்திகள் பரவுகின்றன
இந்த நிலையில் மேற்படி தடுப்பூசிகளின் பாதுகாப்பு மற்றும் செயல்திறன் தொடர்பாக பல்வேறு வதந்திகள் பரப்பப்படுகின்றன. குறிப்பாக கோவேக்சின் தடுப்பூசியின் செயல்பாடு குறித்து பல்வேறு கேள்விகளும், சந்தேகங்களும் எழுப்பப்பட்டு வருகின்றன.

இத்தகைய வதந்திகளுக்கு இடம் கொடுக்கக்கூடாது என்பதில் மத்திய அரசு மிகுந்த உறுதியாக இருக்கிறது. குறிப்பாக தடுப்பூசி திட்டம் அமல்படுத்துவதற்கு முன்னரே இந்த வதந்திகளை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளையும் தொடங்கியது.

தலைமை செயலாளர்களுக்கு கடிதம்
எனினும் இந்த தடுப்பூசிகள் குறித்து பல்வேறு வதந்திகள் நாள்தோறும் பரப்பப்படுகின்றன. இது தொடர்பாக சமூக வலைத்தளங்கள் மற்றும் ஊடகங்களில் பல்வேறு தவறான தகவல்கள் பரவி வருகின்றன.

எனவே இந்த வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. இது தொடர்பாக மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா, மாநிலங்களின் தலைமை செயலாளர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

பாதுகாப்பான தடுப்பூசிகள்
சுகாதார பணியாளர்கள் மற்றும் முன்கள வீரர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடுவதில் முதல் முன்னுரிமை அளிக்க வேண்டும் என தடுப்பூசி நிர்வாகம் குறித்த தேசிய நிபுணர் குழு முடிவு செய்தது. 

இவர்களை தொடர்ந்து 2 மற்றும் 3-ம் கட்ட முன்னுரிமையாளர்களுக்கு தடுப்பூசி போடப்படும்.

இந்த தடுப்பூசி திட்டத்தில் பயன்படுத்தப்படும் கோவேக்சின், கோவிஷீல்டு ஆகிய 2 தடுப்பூசிகளும் பாதுகாப்பானவை மற்றும் எதிர்ப்பாற்றல் மிகுந்தவை என நாட்டின் தேசிய ஒழுங்குமுறை ஆணையம் கண்டறிந்திருக்கிறது என்பதை உறுதியாக வலியுறுத்த விரும்புகிறேன்.

பயமுறுத்தும் தகவல்கள்
ஆனால் இந்த தடுப்பூசிகளின் பாதுகாப்பு மற்றும் செயல் திறன் குறித்து நிரூபிக்கப்படாத மற்றும் மக்களை தவறாக வழிநடத்தும் வதந்திகள் சமூக வலைத்தளங்கள் மற்றும் பிற ஊடகங்களில் பரவி வருகின்றன. இத்தகைய வதந்திகள், குறிப்பாக சொந்த நலன்களுக்காக பரப்பப்படும் இந்த தகவல்களால் மக்களிடையே தேவையற்ற சந்தேகங்களை எழுப்ப முடியும்.

எனவே இந்த தடுப்பூசிகளின் பாதுகாப்பு மற்றும் நோய் எதிர்ப்பு திறன் குறித்த இதுபோன்ற அனைத்து வகையான பயமுறுத்தும் தகவல்களையும் சரிபார்க்க வேண்டிய தேவை உள்ளது.

இந்திய தண்டனை சட்டம்
அந்த வகையில் இத்தகைய வதந்திகள் மற்றும் தவறான தகவல்களை சரிபார்ப்பதற்காக சரியான நெறிமுறை ஒன்றை மாநிலங்கள் உருவாக்க வேண்டும். அத்துடன் இத்தகைய தவறான தகவல்களுக்கு 
எதிர்வினையாற்றுவதற்கான சரியான நடவடிக்கைகளை, குறிப்பாக கொரோனா தடுப்பூசிகளின் செயல்பாடு குறித்து உண்மையான தகவல்களை வெளியிடுவதற்கான பணிகளை சம்பந்தப்பட்ட துறையினர் மேற்கொள்ள வேண்டும்.

அது மட்டுமின்றி தடுப்பூசிகள் குறித்த தவறான தகவல்கள் மற்றும் வதந்திகளை வெளியிடுவோர் மீது பேரிடர் மேலாண்மை சட்டம்-2005 மற்றும் இந்திய தண்டனை சட்டம்-1860 ஆகியவற்றின் தகுந்த பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு உள்துறை செயலாளர் அஜய் பல்லா கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்