ஆதரவில்லா 10 முதியவர்களை சாலையில் வீசி சென்ற அவலம்; எம்.எல்.ஏ. போலீசில் புகார்

மத்திய பிரதேசத்தில் ஆதரவில்லாத 10 முதியவர்களை அரசு பணியாளர்கள் சாலையில் வீசி சென்றது பற்றி காங்கிரஸ் எம்.எல்.ஏ. போலீசில் புகார் அளித்துள்ளார்.

Update: 2021-01-31 02:57 GMT
இந்தூர்,

மத்திய பிரதேசத்தில் வீடில்லாமல், ஆதரவில்லாமல் சுற்றி திரிபவர்களை இந்தூர் நகராட்சி பணியாளர்கள் பிடித்து லாரியில் ஏற்றி அரசு காப்பகத்திற்கு அழைத்து சென்றனர்.  ஆனால், வழியில் அவர்களில் சிலரை சாலையில் இறக்கி விட்டு சென்றனர்.

கடும் குளிரில் ஆதரவற்ற நிலையில் சாலையில் அவர்களை இறக்கி விடுவதற்கு அந்த பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.  சிலர் அதனை படம் பிடித்தனர்.  இந்த வீடியோ வெளிவந்து வைரலானது.

இதற்கு காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி கடும் கண்டனம் வெளியிட்டார்.  இந்த சம்பவத்தில், அதிகாரிகளின் உத்தரவை பின்பற்றும் பணியாளர்களை தண்டிக்காமல் அவர்களுக்கு உத்தரவிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என டுவிட்டரில் பதிவிட்டார்.

இந்த சம்பவத்திற்கு மத்திய பிரதேச முதல் மந்திரி சிவராஜ் சிங் சவுகான் வருத்தம் தெரிவித்துள்ளதுடன், மாவட்ட நிர்வாகத்திடம் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.  இதனையடுத்து நகராட்சி துணை ஆணையாளர் சஸ்பெண்டு செய்யப்பட்டார்.  அதேவேளையில், முதியவர்கள் அரசு இல்லங்களுக்கு திரும்பி விட்டனர் என பா.ஜ.க. எம்.பி. சங்கர் லால்வானி கூறியுள்ளார்.

இந்த சம்பவம் பற்றி காங்கிரஸ் எம்.எல்.ஏ. சஞ்சய் சுக்லா போலீசில் புகார் அளித்துள்ளார்.  ஆதரவில்லாத 10 முதியவர்கள் காணாமல் போயுள்ளனர் என அதில் தெரிவித்து உள்ளார்.

எனினும், நகராட்சி ஆணையாளர் பிரதீபா பால் கூறும்பொழுது, குளிர் காலத்தில் இதுபோன்று ஆதரவில்லாமல் சுற்றி திரிபவர்களை மாநகராட்சி பணியாளர்கள் அரசு காப்பகத்திற்கு கொண்டு செல்வார்கள்.  சிலர் செல்ல தயாராக இருப்பர்.  ஆனால், அவர்களில் சிலர் வேறு இடங்களுக்கு சென்று விடுவர் என கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்