டெல்லி விவசாயிகள் போராட்டம்: சிங்கு எல்லையில் பங்கேற்ற விவசாயி மாரடைப்பால் மரணம்

டெல்லியில் சிங்கு எல்லையில் நடைபெற்ற விவசாயிகள் போராட்டத்தில் பங்கேற்ற விவசாயி மாரடைப்பால் மரணமடைந்தார்.

Update: 2021-02-13 20:53 GMT
கோப்புப்படம்
புதுடெல்லி, 

டெல்லியின் சிங்கு எல்லையில் விவசாயிகள் போராட்டத்தில் பங்கேற்ற 72 வயதான பஞ்சாப் விவசாயி மாரடைப்பால் உயிரிழந்துள்ளார் என்று போலீசார் தெரிவித்தனர்.

முன்னதாக வேளாண் சட்டங்களை திரும்பப்பெறக்கோரி பஞ்சாப், அரியானா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லியில் போராடி வருகின்றனர். கடந்த நவம்பர் மாத இறுதியில் தொடங்கிய இந்த போராட்டம் இன்னும் முடிவுக்கு வரவில்லை. இரவில் கடுங்குளிர், பகலில் வாட்டும் வெயில் என பல்வேறு சவால்களுக்கு மத்தியில் வீரியமுடன் நடந்து வரும் இந்த போராட்டம் விவசாயிகளுக்கு பெரும் உடல் உபாதைகளை அளித்து வருகிறது. இதனால் போராட்டக்களத்திலேயே விவசாயிகள் அடிக்கடி மரணத்தை தழுவி வருகின்றனர்.

இந்நிலையில் சிங்கு எல்லையில் போராடி வந்த பஞ்சாப்பின் மோகா மாவட்டத்தை சேர்ந்த ஹன்சா சிங் (வயது 72) என்ற விவசாயி நேற்று முன்தினம் இரவு திடீரென உயிரிழந்தார். மாரடைப்பால் அவர் மரணம் அடைந்ததாக போலீசார் தெரிவித்தனர். விவசாயி ஹன்சா சிங்கின் உடல் நேற்று பிரேத பரிசோதனைக்கு பின் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

மேலும் செய்திகள்