சூரியக்காற்று காரணமாக செவ்வாய் கிரகம் வளிமண்டலத்தை இழந்திருக்ககூடும் - விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

இந்திய விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் சூரியக்காற்று காரணமாக செவ்வாய் கிரகம் தனது வளிமண்டலத்தை இழந்திருக்ககூடும் என்பதை கண்டுபிடித்துள்ளனர்.

Update: 2021-02-21 00:27 GMT
புதுடெல்லி,

சுமார் 4.6 பில்லியன் ஆண்டுகளுக்கு முன் உருவானதாக கருத்தப்படும் செவ்வாய் கிரகமானது சூரிய குடும்பத்தில் பூமிக்கு அடுத்ததாக இருக்கும் கோளாகும். பூமியைப் போலவே இங்கு ஒரு காலத்தில் உயிரினங்கள் வாழ்ந்திருக்கலாம் என்றும், வளிமண்டலம் அழிந்ததன் காரணமாக அங்கு வாழ்ந்த உயிரினங்கள் அழிந்து போயிருக்கலாம் என்றும் விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

இதற்கு வலு சேர்க்கும் விதமாக செவ்வாய் கிரகத்தில் உள்ள பாறை அமைப்புகள், நீரோட்டம் இருந்ததற்கான ஆதாரங்கள் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் செவ்வாய் கிரகத்தில் நடந்த ஆய்வுகள் மூலம் நமக்கு தெரிய வந்துள்ளன. இதன் காரணமாகவே பல்வேறு உலக நாடுகள் செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்ய தீவிரமாக முயற்சி செய்து வருகின்றன. 

இந்த நிலையில் செவ்வாய் கிரகம் தனது வளி மண்டலத்தை (காற்று மண்டலத்தை) இழக்க காரணமாக, சூரிய காற்று இருந்திருக்கக்கூடும் என்று கம்ப்யூட்டர் அடிப்படையிலான ஆய்வைக் கொண்டு இந்திய விஞ்ஞானிகள் கண்டுபிடித்து இருக்கிறார்கள்.

இந்த ஆய்வை நடத்திய கொல்கத்தாவை சேர்ந்த இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் அர்ணாப் பசாக் மற்றும் திவ்யேந்து நந்தி ஆகியோர் கூறும்போது, “இந்த காந்தப்புலங்கள், கிரகங்களுக்கு ஒரு பாதுகாப்பு குடை போல செயல்பட முடியும். சூரியனிடம் இருந்து புறப்பட்டு வருகிற அதிவேக பிளாஸ்மா காற்றில் இருந்து வளி மண்டலத்தை பாதுகாக்க முடியும்” என்று தெரிவித்தனர்.

இந்த கண்டுபிடிப்பானது, பிற கிரகங்களில் உயிரினங்கள் வாழும் வகையில், பாதிப்பை விளைவிக்கும் கதிரியக்க வீச்சுகளை தடுப்பதற்காக பாதுகாப்பான காந்தப்புலம் தேவை என்ற விஞ்ஞானிகளின் நீண்டகால நம்பிக்கையை உறுதிப்படுத்துவதாக அமைந்துள்ளது.

மேலும் செய்திகள்