இளம்பெண்ணின் மரணத்திற்கும், எனக்கும் தொடர்பு கிடையாது: மராட்டிய வனத்துறை மந்திரி சஞ்சய் ரதோட்

இளம்பெண்ணின் மரணத்திற்கும், எனக்கும் தொடர்பு கிடையாது என வனத்துறை மந்திரி சஞ்சய் ரதோட் கூறியுள்ளார்.

Update: 2021-02-23 21:47 GMT
பூஜா சவான்; மராட்டிய வனத்துறை மந்திரி சஞ்சய் ரதோட்
மந்திரி மறுப்பு
புனே ஹடாப்சர் பகுதியில் கடந்த 8-ந் தேதி டிக்-டாக் பிரபலமான பூஜா சவான் (வயது23) என்ற இளம்பெண் கட்டிடத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். இளம்பெண்ணின் மரணத்திற்கும், சிவசேனாவை சேர்ந்த வனத்துறை மந்திரி சஞ்சய் ரதோடுக்கும் தொடர்பு இருப்பதாக சமூகவலை தளங்களில் தகவல்கள் பரவின. மேலும் இந்த விவகாரத்தில் சஞ்சய் ரதோட் பதவி விலக வேண்டும் என பா.ஜனதா வலியுறுத்தியது. இந்தநிலையில் மந்திரி சஞ்சய் ரதோட் தனக்கும் இளம்பெண்ணின் மரணத்துக்கும் தொடர்பு கிடையாது என கூறியுள்ளார். வாசிம் பகுதியில் உள்ள கோவிலுக்கு சாமி 
தரிசனம் செய்ய வந்த போது இதை அவர் கூறினார்.

அழுக்கு அரசியல்

மேலும் அவர் கூறியதாவது:-

எங்கள் சமுதாயத்தை சேர்ந்த பூஜா சவானின் மறைவு துரதிருஷ்டவசமானது. இந்த மரணத்தால் எங்களின் ஒட்டு சமுதாயமும் வேதனையில் உள்ளது. அந்த பெண்ணின் மறைவால் வாடும் குடும்பத்தினரின் வேதனையில் பங்கெடுத்து கொள்கிறோம். ஆனால் இந்த சம்பவத்துக்கு பிறகு செய்வது அழுக்கு அரசியல். குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றது. சமூகவலைதளம், ஊடகங்களில் வந்த 
எதுவும் உண்மையில்லை.

இந்த விவகாரம் குறித்து முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். போலீசார் அவர்களது பணியை செய்து வருகின்றனர். நீங்கள் தயவு செய்து என்னையும், என் குடும்பத்தையும், எனது சமுதாயத்தையும் அவமானப்படுத்தாதீர்கள். விசாரணை முடிவுக்காக காத்திருங்கள்.

தலைமறைவாக வில்லை
உங்கள் (ஊடகங்களின்) அன்பை நான் டி.வி.யில் பார்த்துக் கொண்டிருந்தேன். எனக்கு முதிய பெற்றோர், ரத்த அழுத்த பிரச்சினைகள் உள்ள மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். கடந்த 10 நாட்களில் நான் அவர்களை கவனித்துக்கொண்டேன். தலைமறைவாக வில்லை. அரசு பணி செய்வதையும் நிறுத்தவில்லை. எனது சமூகத்தினர் என்னை நேசிக்கின்றனர். பலர் என்னுடன் புகைப்படம் எடுத்து கொண்டனர். நான் 30 ஆண்டுகளாக பொது வாழ்வில் உள்ளேன். குறிப்பிட்ட ஒரு சம்பவத்துக்காக என்னை குற்றவாளி கூண்டில் நிற்க வைக்க வேண்டாம். கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்ததை 
தொடர்ந்து, முன்பு போலவே பணிகளை மீண்டும் தொடங்குவேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

அருவருப்பானது
முன்னதாக மந்திரி சஞ்சய் ரதோட் சொந்த ஊரான யவத்மாலில் இருந்து வாசிமில் உள்ள கோவிலுக்கு காரில் வந்தார். இதில் கோவில் முன் அவரது ஆதரவாளர்கள் சமூக இடைவெளியை பின்பற்றாமல் அதிகளவில் திரண்டு இருந்தனர்.இதற்கிடையே பா.ஜனதாவை சேர்ந்த சித்ராவாக், மந்திரி சஞ்சய் ரதோடுக்கு இளம்பெண்ணின் மரணத்தில் தொடர்பு இருப்பதாகவும், முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே அவரை உடனடியாக பதவியில் இருந்து நீக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார். மேலும் அவர் இந்த விவகாரத்தில் மந்திரி அவரது சமுதாயத்திற்கு பின்னால் ஒளிவது அருவருப்பானது எனவும் கூறினார்.

மேலும் செய்திகள்