நாடாளுமன்றம், சட்டசபைகளில் மக்களின் வளர்ச்சியை நோக்கியே விவாதங்கள் இருக்க வேண்டும் - சபாநாயகர் ஓம் பிர்லா பேச்சு

நாடாளுமன்றம், சட்டசபைகளில் மக்களின் வளர்ச்சியை நோக்கியே விவாதங்கள் இருக்க வேண்டும் என்று சபாநாயகர் ஓம் பிர்லா கூறினார்.

Update: 2021-02-25 23:46 GMT
ஷில்லாங்,

மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா 2 நாள் பயணமாக மேகாலயா சென்றுள்ளார். அங்கு கட்டப்பட்டு வரும் புதிய சட்டசபை கட்டிடத்தை நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்த அவர், இன்று பல்வேறு நிகழ்வுகளிலும் பங்கேற்கிறார்.

தலைநகர் ஷில்லாங்கில் நேற்று மாநில சட்டசபை உறுப்பினர்கள் மத்தியில் ஓம் பிர்லா உரையாற்றினார். அப்போது அவர் கூறுகையில், ‘அனைத்து அரசியல்சாசன நிறுவனங்களும் அவற்றின் அரசியல்சாசன வரைமுறைக்கு உட்பட்டு ஒன்றுடன் ஒன்று இணைந்து செயல்பட்டால் மட்டுமே ஜனநாயகம் வலிமை பெறும்’ என்று கூறினார்.

நாடாளுமன்ற, சட்டசபைகளில் விவாதத்தின் போது கருத்து வேறுபாடு ஏற்படும் என்றும், ஆனால் முட்டுக்கட்டை ஏற்படும் நிலைக்கு விட்டுவிடக்கூடாது என்றும் எச்சரித்த ஓம்பிர்லா, நாட்டு மக்களின் வளர்ச்சியை நோக்கி மட்டுமே நமது விவாதங்கள் செல்ல வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். பெண்கள், இளம் மற்றும் புதிய எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தின் பல்வேறு நடைமுறைகளை தெரிந்து கொள்ளச்செய்வதே தனது முன்னுரிமைகளில் முக்கியமானது எனவும் குறிப்பிட்டார்.

கொரோனா சூழலுக்கு மத்தியிலும் கடந்த நவம்பரில் சட்டசபை கூட்டத்தை நடத்தியதற்காக மேகாலயா எம்.பி.க்களுக்கு ஓம் பிர்லா பாராட்டும் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்