மேகதாதுவில் புதிய அணையை கட்டுவோம்; காவிரி உபரி நீர் விவகாரத்தில் தமிழக அரசுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு: கர்நாடக சட்டத்துறை மந்திரி பசவராஜ் பொம்மை
காவிரி உபரி நீர் விவகாரத்தில் தமிழக அரசுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடருவோம் என்றும், மேகதாதுவில் புதிய அணையை கட்டுவோம் என்றும் கர்நாடக சட்டத்துறை மந்திரி பசவராஜ் பொம்மை கூறினார்.;
கர்நாடக நீர்ப்பாசனத்துறை அதிகாரிகளுடன் போலீஸ், சட்டத்துறை மந்திரி பசவராஜ் பொம்மை பெங்களூருவில் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக்கு பிறகு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
உண்மைக்கு புறம்பானவை
காவிரி உபரி நீரை பயன்படுத்திக் கொள்ள தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக எங்களுக்கு தெரியவந்துள்ளது. இதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம். காவிரி படுகையில் உள்ள மாநிலங்கள் சட்டத்தை
பின்பற்ற வேண்டும். தமிழக அரசின் ஆறுகள் இணைப்பு திட்டத்திற்கு மத்திய அரசு நிதி உதவி வழங்கி இருப்பதாக வெளியாகியுள்ள தகவல் உண்மைக்கு புறம்பானவை.
தமிழக அரசுக்கு மத்திய அரசு எந்த நிதி உதவியையும் வழங்கவில்லை. இந்த தகவலை யாரும் நம்ப வேண்டாம். தமிழக அரசின் ஆறுகள் இணைப்பு திட்டம், நதி நீர் பங்கீட்டு ஆணையத்தின் தீர்ப்புக்கு எதிரானது. எந்த அடிப்படையில் தமிழக அரசு ஆறுகள் இணைப்பு திட்டத்தை தொடங்கியுள்ளதோ தெரியவில்லை. கர்நாடக அரசுக்கு சிறிய தகவல் கூட கொடுக்காமல் திட்டத்தை தமிழக அரசு தொடங்கி இருப்பது சரியல்ல.
அதிகாரம் கொடுத்தது யார்?
கர்நாடக அரசின் நதிநீர் திட்டங்களுக்கு தமிழக அரசு நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பு இருந்தே எதிர்த்தே வந்துள்ளது. நமக்கு அனைத்து நிலைகளிலும் பிரச்சினையை உருவாக்குவதே தமிழகத்தின் நோக்கம். காவிரி உபரி நீரை பயன்படுத்துவதாக இருந்தால், அந்த கூடுதல் நீர் எவ்வளவு என்பதை முடிவு செய்ய வேண்டும். தமிழக அரசின் செயலை நாங்கள் தீவிரமாக கண்டிக்கிறோம். காவிரி உபரி நீரை பயன்படுத்த தமிழகத்திற்கு அதிகாரம் கொடுத்தது யார்?.
காவிரி நதி நீர் பிரச்சினையில் தனி நபர்கள் வழக்கு தொடுக்க முடியாது என்று கோர்ட்டு தீர்ப்புகளில் கூறப்பட்டுள்ளன. ஆனால் தமிழக அரசு, தனிநபர் மூலம் கோர்ட்டில் வழக்கு தொடுத்துள்ளது. சட்ட போராட்டம் நடத்த கர்நாடக அரசுக்கு தெரியும். தமிழக அரசின் நதிகள் இணைப்பு திட்டத்திற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடுப்போம். இதுகுறித்து சட்ட நிபுணர்களுடன் கலந்து ஆலோசனை நடத்தியுள்ளோம்.
கண்காணிப்பு அதிகாரி
தமிழக அரசு வைகை-குண்டாறு இணைப்பு திட்ட பணிகளை தொடங்கி உள்ளது. காவிரியில் உபரியாக 45 டி.எம்.சி. (ஒரு டி.எம்.சி. என்பது 100 கோடி கனஅடி) நீர் கிடைக்கிறது. இந்த நீரை பயன்படுத்த தமிழக அரசு திட்டமிட்டு உள்ளதால், இது கர்நாடகத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும். உபரி நீர் இன்னும் சரியான முறையில் பங்கீடு செய்யப்படவில்லை. காவிரி நீர் பங்கீடு தொடர்பாக 3 மாநிலங்களில் கண்காணிப்பு அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். மேகதாது திட்டம், ஆற்றின் கீழ் பகுதியில் செயல்படுத்தப்படுகிறது. கோர்ட்டு தீர்ப்பின்படியே நாங்கள் புதிய அணையை கட்டுவோம். இது குடிநீர் திட்டம்.
இவ்வாறு மந்திரி பசவராஜ் பொம்மை கூறினார்.