மாற்றுத்திறனாளி மகனுடன் பெண் தற்கொலை

கலபுரகி டவுனில் கணவரின் கொடுமையால் மாற்றுத்திறனாளி மகனுடன், பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நடந்து உள்ளது.

Update: 2021-03-11 21:45 GMT
கலபுரகி:

கலபுரகி டவுனில் கணவரின் கொடுமையால் மாற்றுத்திறனாளி மகனுடன், பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நடந்து உள்ளது.

மாற்றுத்திறனாளி

  கலபுரகி டவுன் ஓம் சிட்டி பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் ஜெகதீஷ். இவர் வங்கி ஒன்றில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இவருக்கும் பெலகாவியை சேர்ந்த சுசித்ரா (வயது 34) என்பவருக்கும் கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்து இருந்தது. இந்த தம்பதிக்கு வினித் (9) என்ற மகன் இருந்தான். வினித் வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி ஆவான்.

  இந்த நிலையில் கடந்த 3 ஆண்டுகளாக வினித் மாற்றுத்திறனானி என்பதால் அதனை காரணம் காட்டி, சுசித்ராவிடம், ஜெகதீஷ் சண்டை போட்டு வந்ததாக தெரிகிறது. மேலும் சுசித்ராவை அடித்து, உதைத்து ஜெகதீஷ் கொடுமைப்படுத்தி வந்ததாகவும் சொல்லப்படுகிறது.

தூக்குப்போட்டு தற்கொலை

  மேலும் கடந்த ஒரு வாரமாக தினமும் சுசித்ராவிடம் சண்டை போட்டு அவரை ஜெகதீஷ் அடித்து, உதைத்ததாக தெரிகிறது. இதனால் மனம் உடைந்த சுசித்ரா தற்கொலை செய்ய முடிவு செய்தார். ஆனால் தான் தற்கொலை செய்து கொண்டால் மகனை கவனிக்க ஆள் இல்லாமல் போய் விடும் என்று கருதிய சுசித்ரா, மகனுடன் தற்கொலை செய்ய முடிவு செய்தார்.

  இந்த நிலையில் நேற்று காலை ஒரே சேலையை பயன்படுத்தி சுசித்ரா, தனது மகன் வினித்துடன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி அறிந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக கலபுரகி டவுன் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் அங்கு சென்ற போலீசார் சுசித்ரா, வினித்தின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

  ேபாலீஸ் விசாரணையில் கணவரின் கொடுமை தாங்க முடியாமல் மகனுடன், சுசித்ரா தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக ஜெகதீஷ் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.

மேலும் செய்திகள்