மராட்டியத்தில் மீண்டும் முழு ஊரடங்கு அமலாகிறது; முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே தகவல்

மராட்டியத்தில் சில பகுதிகளில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே தெரிவித்தார். இந்தநிலையில் நாக்பூர் நகரில் 15-ந்தேதி முதல் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர தடை விதிக்கப்பட்டு உள்ளது.

Update: 2021-03-11 23:59 GMT

2-வது அலை

மராாட்டியத்தில் கொரோனா தொற்றின் 2-வது அலை வீசத் தொடங்கி உள்ளது. கடந்த ஜனவரியில் கட்டுக்குள் வந்த கொரோனா, பிப்ரவரி மாதம் முதல் படிப்படியாக அதிகரிக்கத் தொடங்கியது. நேற்று முன்தினம் புதிய உச்சத்தை தொட்டு, 13 ஆயிரத்து 659 பேர் பாதிக்கப்பட்டனர். இது இந்த ஆண்டில் அதிகப்பட்ச பாதிப்பாகும்.

தற்போது கொரோனா அதிகரித்து வரும் 6 மாநிலங்களில் மராட்டியம் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.

தடுப்பூசி போட்ட முதல்-மந்திரி

இந்தநிலையில் 60 வயதான மராட்டிய முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே நேற்று மும்பை ஜே.ஜே. அரசு ஆஸ்பத்திரியில் கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார். அவரது மனைவி ராஷ்மி தாக்கரே, மாமியாரும் தடுப்பூசி போட்டுக்கொண்டனர். அப்போது உத்தவ் தாக்கரேயின் மகனும், மாநில சுற்றுச்சூழல் மந்திரியுமான ஆதித்ய தாக்கரே உடன் இருந்தார்.

பின்னர் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே நிருபர்களிடம் கூறியதாவது:-

முழு ஊரடங்கு

கொரோனா பரவலை கட்டு்ப்படுத்த மாநிலத்தில் சில இடங்களில் கடுமையான (முழு) ஊரடங்கு பிறப்பிக்கப்படும். இது தொடர்பான நடவடிக்கை எடுக்கும் முன்பு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த அரசு சிறப்பு கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யும். பொதுமக்கள் முக கவசம் அணிவதையும், சமூக இடைவெளியை பின்பற்றுவதையும் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும். தேவையில்லாமல் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதன் மூலம் மராட்டியத்தில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள இடங்களில் விரைவில் முழு ஊரடங்கு அமலாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நாக்பூரில் 15-ந் தேதி முதல் அமல்

இதற்கிடையே நாக்பூரில் அதிகாரிகளுடன் அந்த மாவட்ட பொறுப்பு மந்திரி நிதின் ராவத் ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

நாக்பூர் நகரில் வருகிற 15-ந் தேதி முதல் 21-ந் தேதி வரை முழு ஊரடங்கு பிறப்பிக்கப்படுகிறது. இந்த ஊரடங்கு கடுமையாக அமல்படுத்தப்படும். ஊரடங்கு காலத்தில் தனியார் அலுவலகங்கள் மூடப்படும். அரசு அலுவலகங்கள் 25 சதவீத ஊழியர்களுடன் செயல்படும். அத்தியாவசிய கடைகள் மட்டும் திறந்திருக்கும். மதுபானங்கள் ஆன்லைனில் மட்டும் விற்பனை செய்ய அனுமதி உண்டு. பொதுமக்கள் அவசியம் இன்றி வீட்டை விட்டு வெளியே வர அனுமதி இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

அமராவதி மாவட்டத்தில் கடந்த மாதம் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதும், மேலும் சில மாவட்டங்களில் ஏற்கனவே கடுமையான கட்டுப்பாடுகள் பிறப்பிக்கப்பட்டு இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்