ஊரடங்கை விட பாதிக்கப்பட்ட பகுதிகளை தனிமைப்படுத்துங்கள் :மத்திய அரசு அறிவுறுத்தல்

ஊரடங்கு நடவடிக்கை என்பது மிகக் குறைந்த தாக்கத்தைத்தான் ஏற்படுத்தும். பரவலின் அளவையும் ஓரளவுக்குத்தான் குறைக்கும் என மத்திய அரசு கூறியுள்ளது.

Update: 2021-03-16 22:01 GMT
புதுடெல்லி,

கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதை தொடர்ந்து மத்திய குழுவினர் மராட்டியம் வந்திருந்தனர். அந்த குழுவினர் கடந்த 7-ந் தேதி முதல் 11-ந் தேதி வரை பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர். பின்னர் மாநில அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி, முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேயையும் சந்தித்து பேசினர்.

இதையடுத்து அந்த குழுவினர் மத்திய அரசுக்கு சமர்பித்த அறிக்கையில் மராட்டியத்தில் கொரோனா 2-வது அலை தொடக்கத்தில் இருப்பதாக தெரிவித்து உள்ளனர்.

அந்த அறிக்கையின் அடிப்படையில் மத்திய சுகாதாரத்துறை செயலாளர் அசோக் பூஷன், மராட்டிய அரசின் தலைமை செயலாளர் சீத்தாராம் குந்தேக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

கொரோனா வைரஸ் பரவலின் 2-வது கட்ட அலை மராட்டியத்தில் தொடக்கத்தில் உள்ளது. எனவே கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் பாதிக்கப்பட்டவர்களை கண்காணித்தல், பரிசோதனையை தீவிரப்படுத்துதல், பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்துதல், தனிமைப்படுத்தப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்காணித்தல் ஆகிய நடவடிக்கைகள் குறைவாக இருக்கின்றன.

கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் மக்களுக்கு இடையே கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் குறைவாக இருக்கிறது. அரசு ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்படும் கொரோனா நோயாளிகளின் சராசரி எண்ணிக்கையை கணக்கிடும்போது இறப்பு விகிதம் அதிகமாக உள்ளது.

தற்போது மராட்டியத்தில் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டால் அதன் மூலம் 20 பேருக்கு மேல் பரவக்கூடிய நிலை இருக்கிறது. எனவே ஒருவருக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டால் அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் 20 முதல் 30 பேரை கண்டறிய வேண்டும்.

தொற்று பரிசோதனையை அதிகப்படுத்த வேண்டும். வீடு, வீடாகவும், கட்டுப்பாட்டு பகுதிகளிலும் தீவிர கண்காணிப்பு அவசியம். முன்களப்பணியாளர்கள் தேவையை கவனத்தில் கொண்டு அவர்களுக்கு தடுப்பூசி போடுவதை அதிகப்படுத்த வேண்டும். இதேபோல 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், பிற நோய் உள்ள 45 வயதுக்கு மேற்பட்டோருக்கும் தடுப்பூசி போடுவதை விரைவுப்படுத்த வேண்டும். இரவு நேர ஊரடங்கு, வார இறுதி நாட்களில் ஊரடங்கு, பகுதியளவு ஊரடங்கு போன்றவை மூலம் கொரோனா பரவல் ஓரளவுத்தான் குறையும்.

மத்திய குழுவின் ஆய்வின்படி, மராட்டியத்தில் சில மாவட்டங்களில் இரவு நேர ஊரடங்கு, பாதி கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு, வார இறுதி நாட்களில் ஊரடங்கு போன்றவை கொண்டு வரப்பட்டுள்ளன. ஆனால், ஊரடங்கு நடவடிக்கை என்பது மிகக் குறைந்த தாக்கத்தைத்தான் ஏற்படுத்தும். பரவலின் அளவையும் ஓரளவுக்குத்தான் குறைக்கும். 

பாதிக்கப்பட்ட பகுதிகளைத் தனிமைப்படுத்தும் நடவடிக்கைகளை மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி மாவட்ட நிர்வாகம் எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையை அடிப்படையாக கொண்டு கட்டுப்பாட்டு பகுதிகளை உருவாக்க வேண்டும். டிஜிட்டல் வரைபடம் மூலம் இந்த பகுதிகளை உருவாக்கலாம். இந்த பகுதிகளில் கடுமையான கட்டுப்பாடுகளை அமல்படுத்த வேண்டும். மேலும் இங்கு அதிவிரைவு குழுவினரை நியமித்து, அவர்களின் செயலாக்கத்தை வேகப்படுத்த வேண்டும் இவ்வாறு அசோக் பூஷன் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்