மராத்தியர்கள் தாக்கப்படுகிறார்கள்; பெலகாவியை யூனியன் பிரதேசமாக அறிவிக்க வேண்டும்; சிவசேனா வலியுறுத்தல்

பெலகாவியை யூனியன் பிரதேசமாக அறிவிக்க வேண்டும் என சிவசேனா வலியுறுத்தி உள்ளது.

Update: 2021-03-16 22:30 GMT

மராத்தியர்கள் மீது தாக்குதல்

மராட்டிய எல்லைப்பகுதியில் கர்நாடகாவில் உள்ள பெலகாவி மாவட்டத்தில் அதிகளவில் மராத்தியர்கள் வசித்து வருகின்றனர். எனவே அந்த பகுதிகளை மராட்டியம் உரிமைகோரி வருகிறது. மராட்டியம்- கர்நாடக எல்லை பிரச்சினை தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது.

இந்தநிலையில் சிவசேனா கட்சியின் சாம்னா பத்திரிகையில் கர்நாடக மாநிலம் பெலகாவியில் மராத்தியர்கள் தாக்கப்படுவதாக கூறியுள்ளது. மேலும் பெலகாவியில் கடைகளில் மராத்தி பெயர் பலகைகள் நீக்கப்பட்டதாகவும், மராத்திய சமூகவலைதள பயன்பாட்டாளர்கள் குறிவைக்கப்படுவதாகவும் குற்றம்சாட்டி உள்ளது.இதேபோல கர்நாடக போலீசாரும் மராத்தியர்களை துன்புறுத்துவதாகவும் கூறியுள்ளது.

யூனியன் பிரதேசம்

மேலும் இதுகுறித்து அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

இந்த வன்முறை சம்பவங்கள் முடிவுக்கு வரவில்லையெனில், பெலகாவியை மத்திய அரசு யூனியன் பிரதேசமாக அறிவிக்க வேண்டும். இந்த பிரச்சினையை எதிர்க்கட்சி தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் மத்திய அரசு, கர்நாடக முதல்-மந்திரியிடம் எடுத்து செல்ல வேண்டும். மராத்தியர்கள் மத்திய பிரதேச மாநிலம் இந்தூரிலும், குஜராத் மாநிலம் வதோதராவிலும் உள்ளனர். ஆனால் அவர்களுக்கு அங்குள்ள உள்ளுர் மக்களுடன் எப்போதும் பிரச்சினை இருந்தது இல்லை.

மராட்டியத்திலும் பல மொழிகள் பேசும் மக்கள் நெடுங்காலமாக உள்ளனர். அவர்களை மராத்தியர்கள் ஒருபோதும் மோசமாக நடத்தியது கிடையாது. மராத்தியர்களுக்கு எதிராக உள்ளூர் மக்கள் நடத்தி வரும் வன்முறையை கர்நாடக பா.ஜனதா அரசு கையாளும் விதத்தை பார்த்தால், அரசு உள்ளூர் மக்களை ஊக்குவிப்பது போல உள்ளது. எல்லை பிரச்சினை சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் இருக்கும் போது, மராத்தி பேசும் மக்களை இப்படி நடத்துவது சட்டவிரோதம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்