குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்திற்கு நடைபெற்ற அறுவை சிகிச்சை வெற்றி - ராஜ்நாத் சிங் தகவல்
நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திற்கு பைபாஸ் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்றதாக ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.;
புதுடெல்லி,
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திற்கு கடந்த 26-ம் தேதி லேசான நெஞ்சுவலி ஏற்பட்டது. நெஞ்சுவலி காரணமாக பரிசோதனைக்காக டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனைக்கு ராம்நாத் கோவிந்த் அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவரை மருத்துவ கண்காணிப்பில் வைத்து சிகிச்சை அளித்து வந்தனர்.
இதையடுத்து, அவரது உடல்நிலை சீராக இருந்தபோதும், மேல் சிகிச்சைக்காக ராம்நாத் கோவிந்த் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்ற ராணுவ மருத்துவமனை மருத்துவர்கள் பரிந்துரை செய்தனர். அந்த பரிந்துரையையடுத்து குடியரசுத்தலைவர் கோவிந்த் டெல்லி ஏய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவந்தது.
இந்நிலையில், நெஞ்சுவலி காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ள ராம்நாத் கோவிந்திற்கு டெல்லி ஏய்ம்ஸ் மருத்துவமனையில் பைபாஸ் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த அறுவை சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ராஜ்நாத் சிங் தனது டுவிட்டர் பக்கத்தில் இன்று வெளியிட்ட பதிவில், டெல்லி ஏய்ம்ஸ் மருத்துவமனையில் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் பைபாஸ் அறுவை சிகிச்சை செய்துகொண்டார். அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக மேற்கொண்ட மருத்துவ குழுவினருக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். குடியரசுத்தலைவரின் உடல்நிலை குறித்து ஏய்ம்ஸ் மருத்துவமனை இயக்குனரிடம் விசாரித்தேன். குடியரசுத்தலைவர் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்’ என்றார்.