மராட்டியத்தின் புனே நகரில் ஒரு வாரத்திற்கு இரவு ஊரடங்கு அமல்

மராட்டியத்தின் புனே நகரில் கொரோனா பாதிப்பு உயர்வால் ஒரு வார காலத்திற்கு 12 மணிநேர இரவு ஊரடங்கு அமலாகிறது.

Update: 2021-04-02 22:51 GMT
புனே,

மராட்டியத்தின் புனே நகரில் கடந்த புதன்கிழமை திடீரென 8,605 பேருக்கு கொரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டன.  இது ஒரு நாளில் மிக அதிக அளவாகும்.  இதனை தொடர்ந்து அடுத்த நாளும் 8 ஆயிரத்திற்கும் கூடுதலானோருக்கு (8,011) கொரோனா பாதிப்புகள் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டன.

இதனால், தனியார் மருத்துவமனைகள் கொரோனா நோயாளிகளுக்கென 80 சதவீத படுக்கைகளை ஒதுக்கும்படி நகர மேயர் முரளிதரன் கேட்டு கொண்டார்.

கொரோனா தொற்றை கட்டுப்படுத்த முடியவில்லை எனில் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.  இதனை தொடர்ந்து மராட்டியத்தின் புனே நகரில் இன்று (3ந்தேதி) முதல் ஒரு வார காலத்திற்கு 12 மணிநேர இரவு ஊரடங்கு அமலாகிறது.

இதன்படி 3ந்தேதி மாலை 6 மணியில் இருந்து அடுத்த நாள் காலை 6 மணி வரை ஊரடங்கு அமல்படுத்தப்படும்.  இந்த ஊரடங்கு ஒரு வாரத்திற்கு நீடிக்கும்.

இதனால், மத வழிபாட்டு தலங்கள், ஓட்டல்கள் மற்றும் பார்கள், வணிக வளாகங்கள் மற்றும் திரையரங்குகள் ஆகியவை அடுத்த 7 நாட்களுக்கு மூடப்பட்டு இருக்கும் என புனே மண்டல ஆணையாளர் சவுரப் ராவ் கூறினார்.

இந்த காலகட்டத்தில் உணவு மற்றும் மருந்துகளை வீட்டிற்கு கொண்டு சென்று வழங்கவும் மற்றும் பிற அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது.

மேலும் செய்திகள்