கர்நாடகத்தில் 250 ஆரம்ப சுகாதார நிலையங்கள் தரம் உயர்வு- மந்திரி சுதாகர்

கர்நாடகத்தில் முதல் கட்டமாக 250 ஆரம்ப சுகாதார நிலையங்கள் தரம் உயர்த்தப்படுவதாக சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் கூறினார்.

Update: 2021-04-07 20:41 GMT
பெங்களூரு:

  தொற்று நோய் சவால்கள்

  உலக சுகாதார தின விழா பெங்களூரு ராஜீவ்காந்தி மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் கலந்து கொண்டு பேசியதாவது:-

  சாதி-மதங்களை கடந்து ஒவ்வொருவருக்கும் தரமான சுகாதார வசதிகளை பெற உரிமை உள்ளது. குடிநீர், வீடு போன்று தரமான சுகாதார வசதியும் ஒருவரின் அடிப்படை உரிமை ஆகும். அதனால் சுகாதாரத்துறையில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி தரமான சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். பழங்காலத்தில் இருந்து மனித சமூகம், பல்வேறு தொற்றுநோய் சவால்களை எதிர்கொண்டு வருகிறது.

பதற்றம் நிலவியது

  நாம் இதற்கு எதிராக தொடர்ந்து போராடி வருகிறோம். கொரோனா முதல் அலையை நாம் வெற்றிகரமாக எதிர்கொண்டோம். அதே போல் கொரோனா 2-வது அலையையும் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். கொரோனா பரவ தொடங்கியபோது மக்களிடையே ஒரு பதற்றம் நிலவியது. அந்த வைரசுக்கு தடுப்பூசி கண்டுபிடித்து வினியோகம் செய்வதை தொடங்கியுள்ளோம். இதனால் மக்களிடையே அந்த பயம் போய்விட்டது.

  தடுப்பூசியை கண்டுபிடித்து அறிவியல் விஞ்ஞானிகள், மனித சமூகத்திற்கு மிகப்பெரிய உதவியை செய்துள்ளனர். இதை மக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். தகுதியானவர்கள் தாமாக முன்வந்து தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். அவ்வாறு செய்தால் அது மற்றவர்களையும் ஊக்கப்படுத்தும். தடுப்பூசி போட்டுக்கொண்டு சுகாதார பணியாளர்கள் இந்த சமூகத்திற்கு முன்மாதிரியாக திகழ வேண்டும்.

ஆரம்ப சுகாதார நிலையங்கள்

  கர்நாடகத்தில் தற்போது 35 ஆயிரம் ஆக்சிஜன் படுக்கைகள் உள்ளன. கொரோனாவுக்கு முன்பு இந்த எண்ணிக்கை வெறும் 6 ஆயிரமாக இருந்தது. 10 மாதங்களில் இந்த எண்ணிக்கையை அதிகரித்துள்ளோம். பெங்களூருவில் பரிசோதனைகளில் 9 சதவீதம் பேருக்கு வைரஸ் தொற்று ஏற்படுகிறது. மைசூரு, கலபுரகி உள்ளிட்ட மாவட்டங்களில் வைரஸ் தொற்று வேகமாக அதிகரித்து வருகிறது.

  பொதுமக்கள் ஒத்துழைத்தால் கொரோனா 2-வது அலையை கட்டுப்படுத்த முடியும். ராஜீவ்காந்தி மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்திற்கு புதிய கட்டிடம் ராமநகரில் கட்டப்படுகிறது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்னும் 3 மாதங்களில் நடைபெறும். இதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் அரசு செய்து வருகிறது. கர்நாடகத்தில் கிராமப்புறங்களில் உள்ள 2,500 ஆரம்ப சுகாதார நிலையங்களை தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அரசு-தனியார் பங்களிப்பில் முதல் கட்டமாக 250 ஆரம்ப சுகாதார நிலையங்கள் தரம் உயர்த்தும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
  இவ்வாறு மந்திரி சுதாகர் பேசினார்.

மேலும் செய்திகள்