போக்குவரத்து ஊழியர்களுக்கு எடியூரப்பா எச்சரிக்கை

வேலை நிறுத்தத்தை வாபஸ் பெறாவிட்டால் போக்குவரத்து ஊழியர்கள் மீது எஸ்மா சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்-மந்திரி எடியூரப்பா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Update: 2021-04-07 20:43 GMT
பெங்களூரு:


தனியார் பஸ்கள்

  அரசு போக்குவரத்து ஊழியர்கள் சம்பள உயர்வு கோரி காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அரசு பஸ்களின் போக்குவரத்து முடங்கியுள்ளது. இந்த நிலையில் பெலகாவியில் முதல்-மந்திரி எடியூரப்பா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

  வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள போக்குவரத்து ஊழியர்கள் பேச்சுவார்த்தைக்கு வர வேண்டும். அவர்களின் கோரிக்கைகளை அமல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கிறதா? என்பது குறித்து ஆராயப்படும். பொதுமக்கள் பாதிக்காமல் இருக்க மாநிலம் முழுவதும் தனியார் பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களுக்கு சிக்கல்

  பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் ஊழியர்கள் உடனே பணிக்கு திரும்ப வேண்டும். இந்த வேலை நிறுத்தத்தின் பின்னணியில் சிலரின் சுயநல உள்நோக்கம் உள்ளது. அவர்களின் 8 கோரிக்கைகளை நிறைவேற்றியுள்ளோம். ஆயினும் அவர்கள் பிடிவாதமாக இருந்து பஸ் போக்குவரத்தை முடக்கியுள்ளனர். பொதுமக்களுக்கு சிக்கலை ஏற்படுத்துகிறார்கள்.

  ஒருவேளை போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தத்தை வாபஸ் பெறாவிட்டால் அல்லது பேச்சுவார்த்தைக்கு வராவிட்டால் எஸ்மா சட்டத்தின் கீழ் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். 8 சதவீத சம்பள உயர்வு வழங்க அரசு முடிவு செய்துள்ளது. தனியார் பஸ்கள் அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்தை மட்டுமே பயணிகளிடம் வசூலிக்க வேண்டும். கூடுதல் கட்டணம் வசூலித்தால் அத்தகைய பஸ்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
  இவ்வாறு எடியூரப்பா கூறினார்.

மேலும் செய்திகள்