கர்நாடகாவில் ஏப்ரல் 10-ம் தேதி முதல் 8 மாவட்டங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்: முதல்-மந்திரி எடியூரப்பா அறிவிப்பு

கர்நாடகாவில் ஏப்ரல் 10-ம் தேதி முதல் 8 மாவட்டங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளதாக முதல்-மந்திரி எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

Update: 2021-04-08 16:28 GMT
கோப்புப்படம்
பெங்களூரு, 

கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பாக அனைத்து மாநில முதல்-மந்திரிகளுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை நடத்தினார். இதனைத்தொடர்ந்து அக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, மீண்டும் சவாலான சூழ்நிலை; கொரோனா இரண்டாவது அலையை நாம் எதிர்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.

இந்நிலையில் கர்நாடகாவில் 8 மாவட்டங்களில் ஏப்ரல் 10-ம் தேதி முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளதாக முதல்-மந்திரி எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

இதன்படி பெங்களூரு, மைசூரு, கலபுரகி, மங்களூர், தும்கூர், உடுப்பி, பிடார், மணிபால் மாவட்டங்களில் இரவு நேர ஊரடங்கு (இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை) அமல்படுத்தப்பட உள்ளதாகவும், இந்த இரவு நேர ஊரடங்கு ஏப்ரல் 10-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை அமலில் இருக்கும் என்றும் முதல்-மந்திரி எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

இதனிடையே கர்நாடகத்தில் இன்று புதிதாக 6,570 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 10 லட்சத்து 40 ஆயிரத்து 130 ஆக அதிகரித்து உள்ளது. இதில் பெங்களூருவில் மட்டும் 4,422 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்