5-வது நாள் வேலை நிறுத்தம்; பெங்களூருவில் இருந்து வெளியூர்களுக்கு அரசு பஸ்கள் இயக்கம்

5-வது நாள் வேலை நிறுத்த போராட்டத்திற்கு இடையே பெங்களூரு மெஜஸ்டிக்கில் இருந்து வெளியூர்களுக்கு நேற்று அரசு பஸ்கள் இயங்கின. இதனால் பஸ் நிலையத்தில் வெளியூர் செல்ல பயணிகள் குவிந்தனர்.

Update: 2021-04-11 21:52 GMT
மெஜஸ்டிக் பஸ் நிலையத்தில் தனியார், அரசு பஸ்கள் இயங்கின
பெங்களூரு:

5-வது நாளாக போராட்டம்

  6-வது ஊதிய குழு பரிந்துரையின்படி சம்பள உயர்வு வழங்க வேண்டும் என்பது உள்பட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு பஸ் போக்குவரத்து ஊழியர்கள் கடந்த 7-ந் தேதி முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் மாநிலம் முழுவதும் அரசு பஸ்கள் இயங்கவில்லை. இதன்காரணமாக பயணிகளுக்கு ஏற்பட்ட இடையூறை போக்கும் வகையில் தனியார் பஸ்களை அரசு இயக்கி வருகிறது. கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை போராட்டத்தை வாபஸ் பெற மாட்டோம் என்று, அரசு பஸ் போக்குவரத்து ஊழியர்கள் கூறி வருகின்றனர். அவர்களிடம் இதுவரை அரசு சார்பில் பேச்சுவார்த்தை எதுவும் நடைபெறவில்லை.

  இந்த நிலையில் அரசு பஸ் போக்குவரத்து ஊழியர்களின் வேலை நிறுத்த போராட்டம் நேற்று 5-வது நாளாக நீடித்தது. இதனால் பெங்களூரு மெஜஸ்டிக்கில் இருந்து நேற்று காலை வெளியூர்கள், வெளிமாநிலங்களுக்கு பஸ்கள் இயக்கப்படவில்லை.

வெளியூர்களுக்கு பஸ்கள் இயக்கம்

  நகருக்குள் ஓடும் பி.எம்.டி.சி. பஸ்களும் இயங்கவில்லை. இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர். இதற்கிடையே நேற்று மதியம் முதல் மெஜஸ்டிக்கில் இருந்து தாவணகெரே, பல்லாரி, பெலகாவி ஆகிய பகுதிகளுக்கு 5 அரசு பஸ்கள் இயக்கப்பட்டன. இந்த பஸ்களில் சொந்த ஊர்களுக்கு செல்ல பயணிகள் ஆர்வம் காட்டி குவிந்தனர்.

  பின்னர் பயணிகளை ஏற்றி கொண்டு 5 பஸ்களும் அங்கிருந்து புறப்பட்டு சென்றன. இதுபோல யுகாதி பண்டிகையையொடடி சொந்த ஊர் செல்ல மெஜஸ்டிக் பஸ் நிலையத்தில் குவிந்த பயணிகள் அதிக கட்டணம் கொடுத்து தனியார் பஸ்களில் சென்றனர். மேலும் பெங்களூரு நகருக்குள் ஓடும் பி.டி.எம்.சி. பஸ்கள் கணிசமாக இயக்கப்பட்டன. அதாவது மெஜஸ்டிக்கில் இருந்து விமான நிலையம், சந்திரா லே-அவுட், பெங்களூரு பல்கலைக்கழகம் உள்ளிட்ட சில பகுதிகளுக்கு பஸ்கள் இயங்கின. இந்த பஸ்களிலும் பயணிகள் பயணம் செய்தனர். ஆனால் குறைந்த அளவு பயணிகளே பயணம் செய்தததால் பெரும்பாலான இருக்கைகள் வெறிச்சோடி கிடந்தன.

மேலும் செய்திகள்