மராட்டிய மாநிலத்தில் இன்று முதல் ஏப்ரல் 30 வரை 144 தடையுத்தரவு

மராட்டிய மாநிலத்தில் கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் இன்று முதல் ஏப்ரல் 30 வரை 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Update: 2021-04-14 05:11 GMT
மும்பை

மராட்டியத்தில் 2-வது கொரோனா அலை வேகமாக பரவி வருகிறது. இதில் நேற்று மாநிலத்தில் தொற்று பாதிப்பு மீண்டும் 60 ஆயிரத்தை தாண்டியது. நேற்று முன்தினம் ஓரளவு பாதிப்பு குறைந்து இருந்த நிலையில் மாநிலத்தில் புதிதாக 60 ஆயிரத்து 212 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.இதனால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 35 லட்சத்து 19 ஆயிரத்து 208 ஆக உயர்ந்து உள்ளது.

இதில் 28 லட்சத்து 66 ஆயிரத்து 97 பேர் குணமடைந்து உள்ளனர். தற்போது 5 லட்சத்து 93 ஆயிரத்து 42 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனா். இதேபோல மேலும் 281 பேர் ஆட்கொல்லி நோய்க்கு பலியானார்கள். இதனால் தொற்றுக்கு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 58 ஆயிரத்து 526 ஆக அதிகரித்து உள்ளது. மாநிலத்தில் தொற்று பாதித்தவர்களில் 81.44 சதவீதம் பேர் குணமடைந்து உள்ளனர். 1.66 சதவீதம் பேர் உயிரிழந்து உள்ளனர்.

இந்த நிலையில் மராட்டிய மாநிலத்தில்  கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் இன்று முதல் ஏப்ரல் 30 வரை 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மராட்டிய மாநிலத்தில் ஏற்கனவே சனி, ஞாயிறு ஆகிய இரு நாட்களும் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டது. இந்நிலையில் ஏப்ரல் 14 முதல் 30 வரை 144 தடையுத்தரவு பிறக்கப்படுவதாக முதல் மந்திரி உத்தவ் தாக்கரே அறிவித்துள்ளார்.

புதிய வழிகாட்டுதலின்படி அலுவலகங்கள், தொழிற்சாலைகள், பொது இடங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. உணவு, குடிநீர், மின்சாரம் வழங்கல், மருத்துவமனைகள், மருந்துக் கடைகள் ஆகிய இன்றியமையாச் சேவைகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளன. மளிகை, காய்கறி, பழக் கடைகள், பேக்கரி, பால் பொருட்கள் கடைகள் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்